

நாட்டில் முதல் முறையாக கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் 2015 டிசம்பர் மாதம் வரலாறு காணாத வகையில் பெய்த வடழகிழக்கு பருவமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நீண்ட நாட்கள் மழைநீர் தேங்கி நின்றதால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்தது.
அதனால் 2016 ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
பல்வேறு நடவடிக்கை
இதையடுத்து ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துவது, நிலவேம்பு குடிநீர் விநியோகம் உள் ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்ததால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.
தமிழகத்தில் 2,456 பேர் பாதிப்பு
இந்நிலையில், 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளி யிட்ட புள்ளி விவரத்தில், ‘‘நாடு முழுவதும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 935 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலின் தீவிரத்தால் 221 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 2 ஆயிரத்து 456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா வில் 7 ஆயிரத்து 133 பேரும், கர்நாடகத்தில் 5 ஆயிரத்து 783 பேரும், ஆந்திராவில் 3 ஆயிரத்து 339 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கம் முதலிடம்
நாட்டிலேயே அதிகப்பட்சமாக மேற்கு வங்கத்தில் 11 ஆயிரத்து 69 பேரும், பஞ்சாப்பில் 10 ஆயிரத்து 475 பேரும், குஜராத்தில் 7 ஆயிரத்து 869 பேரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அட்டவனை விவரம்