

அம்பத்தூர் அடுத்த அயனம்பாக்கத்தில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.16 கோடி மதிப்பிலான 36 டன் செம்மரக் கட்டைகள் மற்றும் சிலைகள் உள்ளிட்ட கலைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் திருவள்ளூரில் ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான அவரை போலீஸார் தேடி வருகின்றனர். அதேபோல், செம்மரக் கடத்தல் விவகாரத்தில் பாடியநல்லூர் ஊராட்சி தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பார்த்திபனை அண்மையில் ஆந்திர மாநில போலீஸார் கைது செய்தனர். இவ்வாறு செம்மரக் கடத்தல் மற்றும் பதுக்கல் விவகாரத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், சென்னை துறைமுகம் வழியாக மத்தியக் கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் கடந்த 1-ம் தேதி முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அம்பத்தூர் அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு வெளிநாடுகளுக்கு கடத்துவ தற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், கிடங்கில் மரத்தை அறுப்பதற்கான பிளேடுகள், இயந்திரங்கள், பாலிஷ் இயந்திரங்கள் உள்ளிட்டவை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல், சென்னை துறைமுகத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்டுக்குச் செல்லவிருந்த ஒரு கன்டெய்னரையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் 19 டன் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றையும் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தவிர சாமி சிலைகள், பழங்கால சிற்பங்கள், கைவினைப் பொருட்களும் கடத்தவிருந்ததை அறிந்து அவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப் பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.16 கோடியாகும். இதுகுறித்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.