

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வை பார்வை யிட வந்த மத்திய அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் விடுதலை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வுப் பிரிவு சார்பில் கீழடியில் மூன்றாம்கட்ட அகழாய்வு விரைவில் தொடங்க உள்ளது. இதனிடையே இங்கு பணியாற்றிய கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாம் மாநிலத்துக்கு மத்திய தொல்லியல் துறை இடமாற்றம் செய்துள்ளது. அவருக்குப் பதிலாக உதவி கண்காணிப்பாளர் ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய கலாச் சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, வணிக வரித் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநர் ராகேஷ் திவாரி ஆகியோர் கீழடிக்கு நேற்று வந்தனர்.
அப்போது மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான முருக வேல்ராஜன் மற்றும் நிர்வாகிகள் மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காகக் காத்திருந்தனர்.
கீழடிக்கு வந்த அமைச்சர்கள் அகழாய்வில் கண்டெடுத்த பொருட் களின் படங்களை நேற்று பிற்பகல் பார்வையிட்டனர். அப்போது, இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற வேண்டும். ஏற்கெனவே இருந்த கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை மாற்றியதை திரும்பப் பெற வேண்டும், தமிழர் களின் தொன்மையை மத்திய அரசு அழிக்கப் பார்க்கிறது எனக் கூறி மக்கள் விடுதலை கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். அவர் களை போலீஸார் எச்சரித்தனர்.
பின்னர், மத்திய அமைச்சர் கள் ஏற்கெனவே அகழாய்வு நடந்த குழிகளை பார்வையிட்டனர். அப் போது, சிவகங்கை மாவட்ட பாஜக வினர் தோப்பில் கிடந்த தென்னை மட்டைகளை எடுத்து மத்திய அர சுக்கு எதிராக கோஷமிட்டவர்களை அடித்து விரட்ட முயன்றனர். பாஜக வினரை போலீஸார் தடுத்து நிறுத் தினர். இதையடுத்து இரு தரப்பி னருக்கும் மோதல் ஏற்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக கோஷங் கள் எழுப்புவோரை கைது செய்ய தவறியதாக போலீஸாரை கண் டித்து பாஜகவினர் கோஷமிட்டனர்.
இதையடுத்து மக்கள் விடு தலை கட்சியினரை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, போலீஸ் வேன் மீது பாஜகவினர் தென்னை மட்டைகளை வீசினர். இதையடுத்து மக்கள் விடுதலை கட்சியினரை போலீஸார் அழைத் துச் சென்றனர்.
‘கீழடி அகழாய்வு தொடர்ந்து நடைபெறும்’
அகழாய்வு இடத்தை நேற்று பார்வையிட்ட மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ்சர்மா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி அகழாய்வு தொடர்ந்து நடைபெற பிரதமர் ஊக்கப்படுத்தியுள்ளார். இந்த ஆராய்ச்சி 5 ஆண்டுகள் நடைபெறும். இதில் 2ஆண்டுகள் முடிந்துள்ளதால் இன்னும் 3 ஆண்டுகள் அகழாய்வு தொடரும்.
இங்கு ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இப்போது கிடைத்துள்ள பொருட்கள் மூலம் அருங்காட்சியகம் அமைக்க வாய்ப்பு இல்லை. இன்னும் 3 ஆண்டுகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கலாம். கீழடியிலோ, மாவட்டத் தலைநகரான சிவகங்கை அல்லது சென்னையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். 2 ஆண்டு ஆய்வறிக்கை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நிதி ஒதுக்கீடும் தாமதமானது. தற்போது ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பணி முடித்தவர்களை இந்தியா முழுமைக்கும் பணியிடமாற்றம் செய்துள்ளோம் என்றார்.