Last Updated : 04 Jul, 2016 11:45 AM

 

Published : 04 Jul 2016 11:45 AM
Last Updated : 04 Jul 2016 11:45 AM

கிருஷ்ணகிரியில் பேருந்து மோதி காட்டு யானை படுகாயம்: மூன்று மணி நேரம் போராடி மீட்பு

கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆண் யானை மீது பேருந்து மோதியதில் யானை படுகாயமடைந்தது. 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் யானையை வனத்துறையினர் கிரேன் மூலம் லாரியில் ஏற்றினர்.

இன்று (திங்கள்கிழமை) காலை 6 மணியளவில் இரண்டு யானைகள் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றன. அப்போது, கும்பகோணம் - பெங்களூரு அரசு விரைவுப் பேருந்து அவ்வழியாக வந்தது. வேகமாக வந்த அந்தப் பேருந்து எதிர்பாராத விதமாக ஒரு யானையின் மீது மோதியது. இதில் யானை காயங்களுடன் சரிந்தது. மற்றொரு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன், தருமபுரி வனப் பாதுகாவலர், மாவட்ட அலுவலர், மாவட்ட டி.எஸ்.பி. ஆகியோர் விரைந்தனர். கால்நடை மருத்துவர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். முதலில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையை தொடங்கினர். யானைக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது ஆனால் உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றனர். இதனையடுத்து யானையை வனப்பகுதிக்கு கொண்டு சென்று கூடுதல் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. எனவே ராட்சத கிரேன் உதவியுடன் யானையை வாகனத்தில் ஏற்றினர். பின்னர் யானை அங்கிருந்து கொண்டு சொல்லப்பட்டது. யானை சற்றே தேறியவுடன் அதை முதுமலை சரணாலயத்துக் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு:

நெடுஞ்சாலையில் யானைக்கு விபத்து ஏற்பட்டதால் அதை அப்புறப்படுத்து 3 மணி நேரம் ஆகியது. இதனால் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் தேங்கின. இதனையடுத்து தற்காலிகமாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. தற்போது போக்குவரத்து சீரடைந்தது.

தொடர்கதை..

கடந்த 2003 மார்ச் மாதம் ராயக்கோட்டை அருகே பெரியநாகதுணை எனும் இடத்தில் ரயில் மோதி 5 யானைகள் பலியாகின. 2013 பிப்ரவரி மாதம் அதே இடத்தில் ரயில் மோதி 2 யானைகள் பலியாகின. இந்தவரிசையில், தற்போது சாலைகளில் யானைகள் அடிபடுவதும் அதிகரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x