Published : 30 Jun 2014 08:33 am

Updated : 07 Jun 2017 16:47 pm

 

Published : 30 Jun 2014 08:33 AM
Last Updated : 07 Jun 2017 04:47 PM

தென்னிந்தியாவின் மிகப்பெரிய விபத்து: பேரிடர் குழு

தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவின் தெற்கு பிராந்திய டிஐஜி செல்வன், மவுலிவாக்கத்தில் கூறியதாவது:

டெல்லி, மும்பை, கோவா போன்ற பல இடங்களில் கட்டிட விபத்துகளில் மீட்புப் பணிகளை செய்திருக்கிறோம். ஆனால், இது போன்ற ஒரு விபத்தை பார்த்ததில்லை. தென்னிந்தியாவின் மிகப் பெரிய கட்டிட விபத்து இதுதான். கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து 320 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி முடிவடைய இன்னும் 3 நாட்கள் வரை ஆகலாம்.


இவ்வாறு அவர் கூறினார்.

டிஜிபி ராமானுஜம் கூறுகையில், ‘‘சென்னை மாநகர போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருப்பவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்றார்.

கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருப்பவர்களைக் கண்டுபிடிக்க ‘விக்டிம் லொக்கேஷன் கேமரா’ என்ற நவீன கேமரா தமிழக தீயணைப்புத் துறையில் உள்ளது. இது 5 அடி நீளம் கொண்டது. நீளமான துப்பாக்கிபோல் இருக்கும். ஒரு முனையில் கேமரா லென்சும் மறுமுனையில் திரையும் இருக்கும்.

சென்னை தீயணைப்புத் துறைக்கு வழங்கப்பட்ட 3 கேமராக்கள் மூலம் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 7 பேரை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். ‘சவுண்ட் அனலைசஸ் மிஷின்’ மற்றும் மோப்ப நாய்கள் மூலமும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய விஜயகுமார் என்பவர், செல்போன் மூலம் தனது நண்பர் ராஜேஷிடம் பேசி உதவி கேட்டிருக்கிறார். ராஜேஷ் கொடுத்த தகவலின்பேரில் தீயணைப்புப் படையினர் அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டு விஜயகுமார் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை மீட்டனர். அவர் இருந்த இடத்தில் 6 பேர் இருந்தனர். அதில் 2 பேர் பலியாகி விட்டனர். மற்றவர்களையும் தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

விஜயகுமார் கூறும்போது, ‘‘கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே வந்தது மறுபிறப்பு எடுத்ததுபோல் உள்ளது. என்னுடன் இடிபாட்டில் சிக்கிய 2 பேர், என் கண் முன்பே இறந்துவிட்டனர். நாமும் இறந்து விடுவோமோ என்று பயந்தேன். நல்லவேளையாக என்னை மீட்டுவிட்டனர்’’ என்றார். பின்னர் அவரை சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.

மீட்புப் பணியில் ப்ரியா ரவிச்சந்திரன்

தீயணைப்புத் துறையின் மண்டல அதிகாரியாக இருந்த ப்ரியா ரவிச்சந்திரன், சென்னை எழிலகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கச் சென்றபோது படுகாயம் அடைந்தார். பின்னர் அவருக்கு தீயணைப்புத் துறை துணை இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில், கட்டிடம் இடிந் ததை அறிந்ததும் அவரே நேரடி யாக சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டார். அவரை அடையாளம் கண்டு கொண்ட பொதுமக்கள் சிலர், அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

8 டிரில்லர்கள், 13 கட்டர்கள்

மீட்புக் குழுவினரின் முக்கிய ஆயுதமாக கான்கிரீட் துண்டுகளை துளையிட்டு உடைக்கும் டிரில்லர்களும், இரும்புக் கம்பிகளை அறுக்கும் கட்டர்களும் உள்ளன. 11 மாடிக் கட்டிடம் முழுவதுமாக ஒன்றன்மேல் ஒன்றாக இடிந்து விழுந்துவிட்டது. மேலிருந்து கீழாக தற்போது 9-வது தளம் வரை துளையிட்டு மீட்புக் குழுவினர் சென்றுள்ளனர். இதற்காக 8 டிரில்லர்களையும், 13 கட்டர்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

5 லட்சம் நிவாரணம் ஆந்திர அரசு அறிவிப்பு

உயிரிழந்த ஆந்திர தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.அமைச்சர் மிருணாளினியை சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை கண்காணிக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் பலர் ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆந்திர வீட்டு வசதி அமைச்சரான மிருணாளினி, விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

நெல்லூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரேகா பிரியதர்ஷினி தலைமையிலான குழு ஏற்கனவே சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை கண்காணித்து வருகிறது.

இறந்ததாக கருதப்பட்டவர் உயிருடன் இருந்ததால் பரபரப்பு

இறந்தவரின் உடலை கொண்டு செல்ல இலவச அமரர் ஊர்தியும் நிறுத்தப்பட்டு இருந்தது. காயங்களுடன் மீட்கப்படுபவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டனர். இறந்தவர்களை இலவச அமரர் வாகனத்தில் ஏற்றி சென்றனர். மீட்புப் பணியின்போது மூச்சு பேச்சு இல்லாமல் ஒருவர் மீட்கப்பட்டார். அவர் இறந்து விட்டார் என நினைத்து இலவச அமரர் வாகனத்தில் ஏற்றினர். அப்போது அவர் மூச்சுவிட்டதை கவனித்த அப்பகுதி மக்கள் அவர் உயிருடன்தான் இருக்கிறார் என சத்தமிட்டனர். இதையடுத்து, டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்து, அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிதவிப்புடன் காத்திருக்கும் உறவினர்கள்...

இடிபாடுகளில் சிக்கியுள்ள தங்களின் சொந்தங்கள் உயிருடன் மீட்கப்பட்டுவிடமாட்டார்களா என்ற தவிப்புடன் 24 மணி நேரத்துக் கும் மேலாக அவர்களது உறவினர் கள் வேதனையுடன் காத்திருக் கின்றனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சின்னமாசலம் கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் தங்கி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி சாந்த குமாரி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டார். அவரது அக்காவும் மாமாவும் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக சின்னமாசலம் கூறினார்.

அவரது உறவினர் சுஜாதா கூறுகையில், “இங்கு நடந்த கட்டுமானப் பணியின்போது ரூ.250 மட்டுமே தரப்பட்டது. மழைக்காக நாங்கள் ஒதுங்கி நின்றிருந்தபோது கண் மூடி திறப்பதற்குள் இடிந்து விழுந்து எல்லாம் முடிந்துவிட்டது” என்றார்.

இடிபாடுகளில் சிக்கியுள்ள கருப்பையா என்பவரின் மனைவி சாந்தி கூறுகையில், “சனிக்கிழமை மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் இங்கு வந்தேன். அப்போதுதான் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது தெரியவந்தது. எனது கணவர் உயிருடன் மீட்கப்படுவார் என்று அனைவரும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அவருக்காக எனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கிறேன். நாங்கள் தற்போது மவுலிவாக்கம் அருகே உள்ள பெரிய பணிச்சேரியில் வசிக்கிறோம்” என்றார்.

விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்த பாபு மற்றும் மேரி கூறுகையில், “நாங்கள் 15 ஆண்டுகளாக போரூர் பகுதியில் வசித்து வருகிறோம். இந்தத் தெருவில் 3 ஆண்டுகளாக வசிக்கிறோம். இவ்வளவு பெரிய கட்டிடம் மழைக்காக இடிந்து விழுந்ததாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இந்த கட்டிடம் கடந்த ஓராண்டாக கட்டப்பட்டு வந்தது. விமான நிலையத்துக்கு அருகில் இருப்பதால் பொதுவாக இவ்வளவு உயரமான கட்டிடத்துக்கு அனுமதி அளிப்பதில்லை. இடிந்த கட்டிடம்தான் இப்பகுதியிலேயே மிகப் பெரியது” என்றனர்.

கட்டிடம் இடிந்ததில் 3 வீடுகள் சேதம்

கட்டிடம் இடிந்து பின்னால் விழுந்ததில், அங்கிருந்த 3 வீடுகள் பலமாக சேதமடைந்தன. இதையடுத்து, அந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பொதுமக்கள் யாரும் அந்த தெரு வழியாக செல்லாமல் இருக்க, போலீஸார் தடுப்புகளை அமைத்து தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.


மவுலிவாக்கம் கட்டிட விபத்துதென்னிந்தியாவின் மிகப்பெரிய விபத்துகட்டிடம் இடிந்து விழுந்ததுபேரிடர் குழு11 பேர் பலி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author