சென்னையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ரயில் டேங்கர்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுமா? - தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சென்னையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ரயில் டேங்கர்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுமா? - தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
Updated on
2 min read

கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நீர் ஆதாரம் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, 1990-ம் ஆண்டு போல் இந்த ஆண்டும் ரயில் டேங்கர்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டுவர தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. மழை 63 சதவீதம் குறைவாக பெய்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் பவானி சாகர், மேட்டூர், வைகை, பாபநாசம், அமராவதி உள்ளிட்ட முக்கிய அணைகள் மற்றும் ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால், அடுத்த சில மாதங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தமிழகத்துக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

வீராணம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாத போது, 1990-ம் ஆண்டில் சென்னையில் கடுமை யான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, பல்வேறு இடங்களில் இருந்து ரயில் டேங்கர்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டது. பின்னர், சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு அது விநியோகம் செய்யப்பட்டது.

எனவே, சென்னையில் குடிநீர் பிரச்சினையை போக்க நீர் ஆதாரம் இருக்கும் வாய்ப்புள்ள பிற மாவட்டங்களில் ஆய்வு செய்து ரயில்கள் மூலமும் குடிநீர் கொண்டு வர தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட வேண்டுமென வலியுறுத்தி யுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பெருநகர நீர் ஆதார புனரமைப்பு இயக்கத்தின் மூத்த நிர்வாகி வி.ராமாராவ் கூறியதாவது:

சென்னைக்கு இன்னும் 40 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும். வரும் மே மாதத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்ப தாக தெரியவில்லை.

எனவே, இதற்கு முன்பு தமிழகத் தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்ட போது மேற்கொண்ட நடவடிக்கையை தற்போதுள்ள அரசும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, நீர் ஆதாரங்கள் இருக்கும் இடங்களை ஆய்வு செய்து ரயில் டேங்கர்கள் மூலம் குடிநீர் கொண்டு வர தமிழக அரசு தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 1990-ம் ஆண்டில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டபோது, ஜோலார் பேட்டை, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இந்த ரயில்கள் தடையின்றி வருவதற்கு முக்கியத் துவம் அளிக்கப்பட்டது. 40 டேங்கர் கள் கொண்ட ரயில் இரவில் ஒன்றும், அதிகாலையில் ஒன்றும் சென்னைக்கு குடிநீர் கொண்டு வந்தன. பின்னர், அந்த தண்ணீர் தூய்மைப்படுத்தப்பட்டு குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.

ஜோலார்பேட்டையில் இருந்து கொண்டுவரப்பட்ட குடிநீர் வில்லிவாக்கத்தில் இருந்தும், செங்கல்பட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட குடிநீர் எழும்பூரில் இருந்தும் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன.தற்போது உள்ள நிலவரப்படி ஒரு ரயிலில் 45 டேங்கர்களை இணைத்து இயக்க முடியும்.

ஆனால், இந்த ஆண்டு சென்னைக்கு டேங்கர் ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவது பற்றி தமிழக அரசு எங்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தமிழக அரசு எங்களிடம் கூறினால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் ஆலோசிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in