

வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மூச்சுத் திணறிப் பரிதாபமாக உயிரிழந் தனர்.
வடபழனி தெற்கு பெருமாள் கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 28 குடும்பங்கள் வசிக்கின்றனர். தரை தளம் வாகனம் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் மீனாட்சி (60), அவரது மகள் செல்வி வசித்து வந்தனர். செல்வியின் மூத்த மகள் லதா. இவர் வடபழனி காளியம்மாள் கோயில் தெருவில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் (3). மற்றொரு மகள் துர்காதேவி. இவர் எம்எம்டிஏ காலனியில் வசித்து வருகிறார். இவரது மகள் சந்தியா 4-ம் வகுப்பு முடித்துள்ளார். லதாவும் துர்கா தேவியும் தனது குழந்தைகளைத் தனது தாய் செல்வி வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் சந்தியாவும், சஞ்சய்யும் தனது பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீனாட்சி, செல்வி, சஞ்சய், சந்தியா ஆகியோர் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4.54 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிளில் பற்றிய தீ ஒன்றன் பின் ஒன்றாக 21 மோட்டார் சைக்கிள்களுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுபற்றி தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிகாலை 5.05-க்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். வடபழனி போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அதற்குள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மார்ட்டின் (24), தங்கம் (22), அந்தோணி (14), ஐயப்பன் (19), விஜயலட்சுமி (41), தர் (60), தீனதயாளன் (33) ஆகியோர் உயிர் பயத்தில் தப்ப முயன்றனர்.
அவர்கள் மீது தீப்பற்றி எரிந்தது. விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
முதல் தளத்துக்குச் சென்று பார்த்தபோது அங்கு படுக்கை அறையில் சஞ்சய், சந்தியா, மீனாட்சி, செல்வி ஆகியோர் இறந்து கிடந்தனர். அவர்களது உடல்களை மீட்ட தீயணைப்புப் படை வீரர்கள் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்ட வசமாக குடியிருப்பில் வசித்து வந்த 50-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்ததும் கூடுதல் காவல் ஆணையர் சங்கர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். தீ விபத்து குறித்து வடபழனி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தடயவியல் ஆய்வு
இதற்கிடையே, தடயவியல் நிபுணர் இளங்கோ தலைமையில் தீ விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேதம் அடைந்த மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்கள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
விபத்து ஏற்பட்டது எப்படி?
இதுகுறித்து வடபழனி போலீஸார் கூறும்போது, "தரை தளத்தில் நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் மின் இணைப்பு பெட்டி (ஜங்ஷன் பாக்ஸ்) உள்ளது. இதன் அருகே மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டி ருக்கின்றன. மின் இணைப்பு பெட்டி யில் இருந்து தீப்பொறி மோட்டார் சைக்கிள் மீது பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.
பசு, குதிரை பலி
வாகன நிறுத்துமிடமான தரை தளத்தில் ஒரு பக்கம் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட் டிருந்தன. மற்றொரு பகுதியில் மாடு, குதிரை போன்றவை வளர்க் கப்பட்டுள்ளன. அதன் அருகிலேயே மின்சார பெட்டி இருப்பதால் அதிலி ருந்து விழுந்த தீப்பொறியால் வைக்கோல் தீப்பற்றி, பின்னர் மோட்டார் சைக்கிள்களுக்கு பரவி யிருக்கக் கூடும் என்றும் கூறப்படு கிறது. தீயில் ஒரு பசு மாடும், ஒரு குதிரையும் சிக்கி இறந்துவிட்டது.