

இலங்கை இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த, ஐ.நா. சபையில் இந்திய அரசே தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று டெசோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோ உறுப்பினர் களின் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவா லயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை நடந்தது. இதில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வழக்கறிஞர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையைக் கண்டித்து, வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மீண்டும் தீர்மானம் கொண்டு வர, அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தற்போதும் இலங்கை அரசு திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் செய்வதாக, சர்வதேச மன்னிப்பு அவை, ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டி சுதந்திரமான சர்வதேச விசாரணைதான் இதற்குத் தீர்வு என்று வலியுறுத்தி உள்ளது. சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் வலியுறுத்தி இருக்கிறார்.
அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கைத் தமிழ்ச் சங்கம், அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்பாட்டுக் குழுமம் மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்டவை, இலங்கை கொடுமை குறித்து சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என கோரியுள்ளன.
இந்நிலையில், வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்பதுடன், சுதந்திரமான சர்வதேச விசாரணை கோரி, இந்திய அரசே தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்.
இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு அமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். முழுமையான அதிகாரம் தமிழர்களுக்குக் கிடைக்கும் வகையில், 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க, கடந்த 27-ம் தேதி, இருநாட்டு மீனவர்களின் கூட்டம் நடந்தது. எந்த முடிவுக்கும் வராமல், வெறும் விவாதத்துடன் கூடிக் கலைந்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகும் கடந்த 30-ம் தேதி இந்திய மீனவர்கள் 38 பேர், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி, நிரந்தர தீர்வுக்கு வழிவகை செய்யாதது வருந்தத்தக்கது. மத்திய அரசே இலங்கை அரசோடு பேச்சு நடத்தி, தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது தொடர்பான ஒப்பந்தம் செல்லாது என வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.