Published : 15 Mar 2017 10:48 AM
Last Updated : 15 Mar 2017 10:48 AM

புதிதாக பணியில் அமர்த்திய கடைகளில் பணிகளை பிரித்துக் கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள்! - மூடப்பட்ட டாஸ்மாக் கடை பணியாளர்கள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு என்ற அரசின் அறிவிப்புபடி ஏற்கெனவே 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும், 2-ம் கட்டமாக அண்மையில் 500 கடைகள் மூடப்பட்டுள்ளன.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள், அவரவர் பணிபுரிந்த கடைக்கு அருகில் உள்ள வேறு கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், ஏற்கெனவே அங்கு பணியாற்றுவோர், புதிதாக பணியில் அமர்த்தியவர்களுக்கு பணிகள் கொடுக்காமலும், பல நெருக்கடி கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஒரு கடையில் குறைந்தபட்சம் 4 விற்பனையாளர்கள் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் பணிபுரிகின்றனர். ஏற்கெனவே மூடப்பட்ட கடையிலிருந்து மாற்றப்பட்டு, புதிதாக கடைக்கு வரும் ஊழியரை பணியைச் செய்ய விடுவதில்லை என்று கூறப்படுகிறது.

கடைக்கு வரும் மது வகைகளின் எண்ணிக்கை, தேவை, வரவு, செலவு சரிபார்த்தல், பணத்தை வங்கியில் செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் மேற்பார்வையாளர் ஈடுபடுவார். ஆனால், மூடப்பட்ட கடையிலிருந்து வரும் மேற்பார்வையாளருக்கு இதுபோன்ற பணிகள் அளிக்கப்படுவதில்லை. பணியை பகிர்ந்தளிக்குமாறும் உத்தரவிடப்படவில்லை.

எனவே, இது தற்காலிக ஏற்பாடாக கருதப்படுகிறது. மூடப்பட்ட கடை உரிமையாளர்களின் பணி பறிபோகலாம் என்றும் அச்சம் நிலவுகிறது.

இது தொடர்பாக, கோவையைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் கூறியதாவது: கோவையில் சுமார் 950 கடைகள் இருந்தன. படிப்படியாக கடைகளை மூடுவது என்று அறிவிப்புக்குப் பின்னர், கோவையில் 4 கடைகள், பொள்ளாச்சியில் ஒரு கடை என 5 கடைகள் மூடப்பட்டன. இரண்டாம் கட்டமாக கோவையில் 9 கடைகள், பொள்ளாச்சியில் 7 கடைகள் என 16 கடைகள் மூடப்பட்டன. இந்தக் கடைகளில் பணியாற்றிய 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் எல்லாம் அருகில் உள்ள கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், ஏற்கெனவே நிர்வாகக் காரணங்களுக்காக கோவை, பொள்ளாச்சி வட்டாரங்களில் சுமார் 60 கடைகள் மூடப்பட்டன. அதில் பணிபுரிந்தவர்களும் அருகில் உள்ள கடைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இவ்வாறு வேறு கடைகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. நாங்கள் பணியில் அமர்த்தப்பட்டுள் கடையில் உள்ள யாரும் எங்களை மதிப்பதில்லை. எங்களை எந்த வேலையும் செய்ய விடுவதில்லை.

மேலும், ஏற்கெனவே மூடப்பட்ட கடைகளில் உள்ள மது பாட்டில்களை திரும்ப ஒப்படைப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன. அந்தக் கடையை காலி செய்வது, அங்கிருக்கும் மது பாட்டில்களை லாரியில் ஏற்றி, கிடங்குகளுக்குக் கொண்டுசெல்வது என ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. அதை ஊழியர்களே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதில் கூறுவதில்லை. இதனால் பல கடைகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது என்றனர்.

இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள், கோவை மண்டல டாஸ்மாக் மேலாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளருமான கே.ஜான் கூறும்போது, “மூடப்படும் கடைகளில் உள்ளவர்களை அருகில் உள்ள கடைகளுக்கு பணிமாற்றம் செய்துள்ளதை, தற்காலிக ஏற்பாடு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் 3.50 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பணியாளர்களை, காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மேலும், மூடப்பட்ட கடைகளின் ஊழியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்ட கடைகளில் இரண்டாம் தரமாக நடத்தப்படுவது குறித்தும், பழைய கடையை மூடும்போது அவர்கள் செய்த செலவுத் தொகையைத் திருப்பித் தருவது குறித்தும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அனைவரையும் சமமாக நடத்துமாறும், பணிகளைப் பிரித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக மாவட்ட மேலாளர்களுடன் பேசி, உரிய தீர்வுகாண்பதாக மண்டல முதுநிலை மேலாளர் தெரிவித்துள்ளார்” என்றனர்.

கோவை மண்டல டாஸ்மாக் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “இப்போதுதான் மாவட்ட மேலாளர்கள் கூட்டம் நடத்தியுள்ளோம். மூடப்பட்ட கடைகளிலிருந்த மேற்பார்வையாளர்ளை, கூடுதல் மேற்பார்வையாளர் என்று நியமித்து, அதனடிப்படையில் பணிகளைப் பிரித்து கொடுப்பதாகத் தெரிவித்துள்ளோம். மற்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் பரிசீலித்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x