

மருத்துவர் சரவணன் மரணத்தில் சதி நடந்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அவரது தந்தை புகார் மனு அளித்துள்ளார்.
திருப்பூர் வெள்ளியங்காடு கோபால் நகர் -2வது வீதியைச் சேர்ந்த கணேசன் மகன் சரவணன்(24). டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்புக்காக (எம்.டி., பொது மருத்துவம்) கடந்த 1-ம் தேதி சேர்ந்தார். டெல்லியில் அவர் தங்கியிருந்த அறையில் கடந்த 10-ம் தேதி விஷ ஊசி செலுத்தப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். டெல்லி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சரவணனின் தந்தை கணேசன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சரவணன் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன. கையில் ஊசி போட்டு அவர் தற்கொலை செய்யும் வாய்ப்பே இல்லை. ஊசி போட்டுக்கொண்டதாக கூறப்படும் விதமே மிகவும் முரண்பாடாக உள்ளது. டெல்லி போலீஸாரின் விசாரணை அதிருப்தி அளிக்கிறது.
சரவணன் 2-ம் கட்ட கலந்தாய் வில் பங்கேற்கும்போது, அங்கு வந்திருந்த சக மாணவர் ஒருவர், பொது மருத்துவப் படிப்புக்கான இடம் எனக்கே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கலந்தாய்வில் சரவணனுக்கு முன்னதாகவே இட ஒதுக்கீட்டில் அழைக்கப்பட்டுள்ளார். பிறகு விதிமுறைகளின்படி எனது மகனே தகுதியானவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது மகன் அந்தப் படிப்பை தேர்வு செய்யாவிட்டால், அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சரவணன் தேர்வு செய்தது கடைசி இடம் என்பதால், அந்த மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், அவர் எய்ம்ஸில் இளநிலை மருத்துவம் படித்தவர். இதனால் ஏதேனும் சதி நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆகவே, இந்த சம்பவத்தில் தமிழக அரசு தலையிட்டு விரைவான மற்றும் நேர்மையான விசாரணைக்கு அழுத்தம் தர வேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
7 முக்கிய சந்தேகங்கள்
இது தொடர்பாக மருத்துவர் சரவணனின் தந்தை கணேசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சரவணன் மரணத்தில் எங்களுக்கு எழுந்துள்ள 7 முக்கிய சந்தேகங்கள் குறித்து, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் விதமாக திருப்பூர் ஆட்சியரிடம் மனு அளித்தோம். மனுவைப் பெற்ற ஆட்சியர், அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். மேலும், டெல்லி போலீஸாரால் உரிய நீதியை எங்களுக்கு பெற்றுத்தர இயலாது. ஆகவே, சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.