

திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி, ஏராளமான பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் துணை ஆட்சியர் பழநியம்மாள் தலைமையில் நேற்று நடைபெற்றது. பெருமாநல்லூர் பகுதி பொதுமக்கள் அளித்த மனு:
பெருமாநல்லூர் மொய்யாண்டாம்பாளையத்தில் அழகாபுரி நகர், திருமலை நகரில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், எங்கள் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறோம்.
குடிநீரை விலை கொடுத்து வாங்கித்தான் பயன்படுத்துகிறோம். தொடர்ந்து விலைக்கு வாங்க, எங்களிடம் வசதி வாய்ப்புகள் இல்லை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ரூ.300 செலவு
காங்கயம் வட்டமலை ஊராட்சி பொத்தியபாளையம் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வந்து அளித்த மனுவில், “எங்கள் பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், குடிநீரை வாரம்தோறும் ரூ.300 விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கும் போதிய குடிநீர் இல்லை. இதனால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
முறைகேடாக விற்பனை
திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட பெண்கள் அளித்த மனு விவரம்:
திருப்பூர் எஸ்.வி. காலனி கிழக்கு 6-வது வீதியில் ஆழ்குழாய் வீட்டு இணைப்பு வைத்துள்ள சிலர் முறைகேடாக பயன்படுத்துகின்றனர். இதனால், எங்கள் பகுதியில் உள்ள ஏராளமான குடும்பங்களுக்கு ஆழ்குழாய் நீர் கிடைப்பதில்லை. எனவே, வீட்டு இணைப்பில் உள்ள ஆழ்குழாய் நீரை முறைகேடாக விற்பனை செய்பவர் மீது, மாநகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை ஊராட்சி கோவில் பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு:
எங்கள் கிராமத்தில் 500 குடும்பங்கள் உள்ளன. கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், மற்றொரு பகுதியில் இருந்து எங்கள் பகுதிக்கு ஆழ்குழாய் நீர் கொண்டு வருவதற்கு, குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கி சரி செய்து தருமாறு பலமுறை மனு அளித்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்கள் கிராமம் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிகிறது.
எங்கள் வீட்டில் உள்ள பொருட்களை விற்று பணம் தருகிறோம். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், பொதுக் குடிநீர் குழாய் அமைத்துத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.