

முதுகு வலி ஏற்படுவதற்கு தண்டு வட டிஸ்க் எலும்பில் இருக்கும் பாக் டீரியாவும் முக்கியமான காரணம் என்பதை கோவை கங்கா மருத்துவ மனை எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மற்றும் விபத்தியல் சிகிச்சை துறை தலைவராக பணியாற்றி வரும் டாக்டர் எஸ்.ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.
இதுதொடர்பாக டாக்டர் எஸ்.ராஜசேகரன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: முதுகு தண்டுவடத்தில் 2 எலும்புகளுக்கு நடுவில் ஜெல்லுடன் கூடிய டிஸ்க் (வட்டு எலும்பு) உள்ளது. அந்த டிஸ்க் நன்றாக இருந்தால்தான், நாம் குனிந்து நிமிர்ந்து எல்லா வேலைகளை செய்ய முடியும். டிஸ்க் வலிமையாக இருந்தால்தான், நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். அந்த டிஸ்கில் ஏற்படும் பிரச்சினைதான் முதுகு வலி ஏற்படுவதற்கு 80 சதவீத காரணமாக சொல்லப்படுகிறது.
டிஸ்க் வலிமை இழப்பதற்கு முதுகில் அடிபடுதல், எடை அதிகமான பொருட்களை தூக்கும் போது கீழே விழுதல் மற்றும் மரபணு பிரச்சினையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. டிஸ்க்கில் ரத்தக்குழாய் கிடையாது. அதனால் அந்த இடத்தில் கிருமிகள் நுழைய முடியாது. அந்த இடம் தொற்று இருக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் நினைத்திருந்தனர். டிஸ்க்கில் பாக்டீரியா இருக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. உலக அளவில் பல்வேறு நிபுணர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் டிஸ்கில் பாக்டீரியா இருப்பதை 100 சதவீதம் உறுதி செய்ய முடியவில்லை.
பாக்டீரியாக்கள்
இந்நிலையில் மரபணு ஆராய்ச்சி போலவே புரோட்டியோ மிக்ஸ் ஆராய்ச்சியின் மூலம் டிஸ்க்கில் என்ன மாதிரியான புரத சத்து இருக்கிறது. வயதுக்கு தகுந்தவாறு புரத சத்து எப்படி மாறுகிறது என்பது பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதில் பாக்டீரியா கிருமிகளுக்கான புரத சத்து இருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு விதமான பாக்டீரியா டிஸ்கில் உள்ள புரத சத்தை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி இருப்பது தெரியவந்தது. இதனால் டிஸ்க் வலிமை இழந்து பாதிக்கப்படுகிறது. இதுவும் முதுகு வலிக்கு முக்கிய காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த இரண்டு பாக்டீரியாக்களும் தோலில் உள்ளன. சிறிய புண், சிராய்ப்பு போன்றவற்றின் மூல மாக பாக்டீரியாக்கள் டிஸ்கில் செல்கின்றன. டிஸ்கில் பாக்டீரியாக் கள் உள்ளது. பாக்டீரியாக்களை வெள்ளை அணுக்கள் எதிர்த்துள் ளன. புரத சத்தை பாக்டீரியாக்கள் மாற்றி அமைக்கின்றன என மூன்று கட்டங்களாக நிரூபிக்கப்பட்டது.
உலகில் முதல்முறை
எங்களுடைய ஆராய்ச்சி கட் டுரை ஐரோப்பாவின் முதுகெலும்பு மருத்துவ இதழில் (European Spine Journal) இந்த மாதம் வெளியாகி யுள்ளது. முதுகு வலிக்கு தண்டுவட டிஸ்க்கில் உள்ள பாக்டீரியாவும் முக்கியமான காரணம் என்பதை உலகில் முதல் முறையாக கண்டு பிடித்தோம். இதனைப் பாராட்டிய சர்வதேச முதுகெலும்பு சங்கம் (The International Society for the Study of the Lumbar Spine - ISSLS) கடந்த 2-ம் தேதி கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் நடந்த விழாவில் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் சான்றிதழ் கொடுத்து கவுரவித்தனர். இந்த ஆராய்ச்சி கங்கா ஆராய்சி மையத்தில் 3 ஆண்டுகள் நடை பெற்றன. ஆராய்ச்சியில் என்னுடன் கங்கா மருத்துவமனை டாக்டர்கள் சித்தார்த் என்.அய்யர், ரிஷி கண்ணா, அஜய் பிரசாத் ஷெட்டி மற்றும் கங்கா ஆராய்ச்சி மையத்தின் டாக்டர்கள் சித்ரா தங்கவேல், ஷரண் நாயகம், கே.தர்மலிங்கம், எம்.ரவீந்திரன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். கங்கா ஆராய்ச்சி மையம் ரூ.2 கோடியில் நிறுவப்பட்டது. இவ்வாறு டாக்டர் எஸ்.ராஜசேகரன் தெரிவித்தார்.