

திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடலில் படகு கவிழ்ந்து 9 பேர் பலியானார்கள்.
திருச்சியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே உள்ள படுக்கப்பத்து அழகம்மன் புரத்தில் கோயில் திருவிழாவுக்காக வந்தனர். பின்னர், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 6 மணியளவில், மணப்பாடில் இருந்து பைபர் படகு ஒன்றில் கடலுக்குள் சவாரி சென்றனர்.
கரையில் இருந்து 25 மீட்டர் தொலைவு சென்ற நிலையில், அதிக பாரம் காரணமாக படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களது கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் தீயணைப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் கடலில் மூழ்கி சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகினர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப் பட்டு திருச்செந்தூர் அரசு மருத் துவமனை, தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட னர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் எம்.கோட்னீஸ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை நடத்தினர். இச்சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன?
சிறிய பைபர் படகில் அதிகபட்சம் 10 பேர் வரை மட்டுமே செல்ல முடியும். இந்த படகில் 30-க்கும் மேற்பட்டோர் சென்றதால் பாரம் தாங்காமல் கடலில் கவிழ்ந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
மணப்பாடு கடல் பகுதி இயற் கையிலேயே அதிக உயரத்தில் அலைகள் வீசும் பகுதியாகும். இதனாலேயே, சர்வதேச அளவில் அலைச்சறுக்கு போட்டிகள் நடத்த தகுதி வாய்ந்த இடமாக கண் டறியப்பட்டு, தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் இங்கு நடத்தப்பட்டன.
மேலும், நேற்று அமாவாசை தினம் என்பதால் மாலையில் மணப்பாடு கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. அலையின் வேகமும் அதிகமாக இருந்தது. அளவுக்கு அதிகமான பயணிகளுடன் சென்ற சிறிய படகு, அதிக உயரத்தில் வீசிய அலைகளில் சிக்கியே விபத்து நேரிட்டதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் பலியானவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அத்துடன் உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மற்றும் சடலங்கள் எண்ணிக் கையைத் தாண்டி, மற்றவர்களின் கதி என்ன? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. குலசேகரப்பட்டிணம் போலீஸார் விசாரிக்கின்றனர்.