Published : 06 Jun 2016 12:05 PM
Last Updated : 06 Jun 2016 12:05 PM

77 வயதிலும் தீராத தமிழ் வேட்கை: தாய்மொழி மலையாளம்; படிப்பது பிஏ தமிழ் இலக்கியம்

மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட என்.சி.சுதாகரன் தனது 77-வது வயதில் கோவை பேரூர் தமிழ்க் கல்லூரி மூலம் கடந்த ஒரு வருடமாக தமிழ் இலக்கியம் (பிஏ) பயின்று வருகிறார். இவரின் சொந்த ஊர் கேரள மாநிலம் கோழிக்கோடு. எல்ஐசியில் நிர்வாக அலுவலராக பணியாற்றி, கோவைக்கு மாறுதலாகி 1998-ம் ஆண்டில் வந்தவர். 2000-ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றவர்.

டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஆர்என்ஐஎஸ் காலேஜ் ஆப் இன்சூரன்ஸின் நிர்வாக உறுப்பினரான இவர், இன்சூரன்ஸ் துறையினருக்கு கவுரவ விரிவுரையாளராக உள்ளார்.

பிஎஸ்சி (கணிதம்), பிஜிஎல், ஃபெலோஷிப் இன் லைப் இன்சூரன்ஸ், டிப்ளமோ இன் மெரைன் இன்சூரன்ஸ், டிப்ளமோ இன் ஹெல்த் இன்சூரன்ஸ் என படித்தவர்.

தற்போது மும்பையில் உள்ள இன்சூரன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இண்டியாவில் டிப்ளமோ இன் மோட்டார் இன்சூரன்ஸ் படித்து வருவதோடு, தமிழ் இலக்கியமும் படித்து வருகிறார்.

இதை இப்போது படிக்க என்ன காரணம்? அவர் கூறுகிறார்:

நான் குடும்பத்தோடு கோயமுத்தூர் வந்து 18 வருஷம் ஆகியும் சுத்தமாக தமிழ் வரலை. எழுத்துக்கூட்டி அலுவலக பெயர்ப் பலகைகளை தப்பா படிச்சேன். எல்ஐசியில் சட்டப்பிரிவில் பணியாற்றியதால் தமிழில் வரும் விஷயங்களையும் படிச்சாகணும். அதற்கு மத்தவங்க உதவி கேட்க வேண்டி வந்தது. அதேபோல், கோவையில் மட்டுமல்ல, திருப்பூர், ஈரோடு ஏரியாக்களிலும் மீட்டிங்கில் பேச வேண்டி இருந்தது.

மத்தவங்க தமிழ்ல கம்பீரமா பேசும்போது நான் ஆங்கிலத்தில் பேசினா சரி வரலை. தமிழ் வகுப்புலபோய் படிக்கலாம்ன்னா அப்ப அதுக்கு நேரமும் இல்லை. இந்தியை பொறுத்தவரை 6 வகுப்புகளில் டிபார்ட்மெண்ட் எக்ஸாம் பாஸாயிருக்கேன். அதுக்கு இன்சன்டிவ் இருந்தது செஞ்சேன்.

தமிழுக்கு அப்படி இல்லையே. அதனால அந்த ஆசையை நிறைவேற்ற நேரம் தள்ளிப்போயிட்டே இருந்தது. பணி ஓய்வு பெற்ற பின்னரும் ஆர்என்ஐஎஸ் விரிவுரையாளர் பணியில் ஈடுபட்டதால் மாதத்தில் 25 நாட்களும் பல இடங்களில் போய் வகுப்பு எடுக்க வேண்டி வந்தது.

இப்ப வருஷத்துக்கு 10 முதல் 14 வகுப்புகளுக்கு மட்டுமே போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கேற்ப தமிழ் படிச்சா என்னன்னு பேரூர் தமிழ்க் கல்லூரியில் அறிவிப்பு பலகையை பார்த்துட்டு நானே நேர்ல போய்க் கேட்டேன். அங்கிருந்த பேராசிரியர்கள் நல்ல வழிகாட்டினாங்க.

வருஷத்துக்கு 5 தாள்கள், மூணு வருஷத்துக்கு தொடர்ந்து எழுதி பாஸ் செஞ்சா பிஏ முடிச்சிடலாம்.

அதுக்கு முன்னாடி சில அசைன்மென்ட் தருவோம். செஞ்சு சமர்ப்பிக்க சொன்னாங்க. 12 பக்கத்துல, அதை செஞ்சு கொடுத்துட்டேன். அதை ஏத்துகிட்டு ஜூன் 19-ம் தேதி தேர்வு வச்சிருக்காங்க. அதுக்கு முன்னாடி மும்பை மோட்டார் இன்சூரன்ஸ் கோர்ஸ் பரீட்சை 14-ம் தேதி வருது. ரெண்டையும் ஒரே நேரத்துல செய்ய முடியாதுங்கறதால முதல்ல மோட்டார் இன்சூரன்ஸ் பரீட்சையை முடிச்சுட்டு அடுத்த டிசம்பர் மாசத்துல தமிழ்த் தேர்வுகளை எழுதறேன்னு கல்லூரியில் அனுமதி கேட்டிருக்கேன். அவங்களும் சம்மதிச்சுட்டாங்க என்றார் மகிழ்ச்சி பொங்க.

இவருக்கு, 42 வயதில் மகள், 40 வயதில் மகன் மற்றும் மனைவி, பேரக் குழந்தைகள் உள்ளனர். ‘இவங்க எல்லாம் என்னைப்போல இல்லை. எல்லோருமே தமிழ் பேசுவாங்க’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x