

மயிலாடுதுறை அருகே கப்பூர் கிராம மக்களின் வசதிக்காக வீரசோழனாற்றில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கப்பூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள வீரசோழன் ஆற்றில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நடைபாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது.
கப்பூர் கிராம மக்கள், தங்களின் அன்றாட பணிகளுக்கு இப்பாலத்தை கடந்துதான் சென்று வர வேண்டியுள்ளது. பாலம் சேதமடைந்துள்ளதால் மிகவும் அச்சத்துடன் செல்ல வேண்டியிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி, சேதமடைந்துள்ள நடைபாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கப்பூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.