

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே போலீஸாரும், வனத்துறை யினரும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை யிட்டதில், அதில் சுமார் 2 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியைப் பின்தொடர்ந்து வந்த காரையும் நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில், ஆந்திர மாநிலம் திருப்பதி காட்டுப் பகுதியில் இருந்து செம்மரக் கட்டையை லாரியில் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலத்துக்கு கடத்த இருந்ததும், செம்மரக் கட்டை கடத்தல் கும்பல் லாரியைப் பின்தொடர்ந்து காரில் கண்காணித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து செம்மரக் கட்டைகளுடன் லாரி, கார் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
லாரி ஓட்டுநர் கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(32), உதவி யாளர் செல்வகுமார்(29), கார் ஓட்டுநர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த வேடசந்திரபாளையத்தைச் சேர்ந்த குணசேகரன்(31), மூர்த்தி(27) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.