

சர்வதேச தாய்மொழி தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தாய்மொழியில் பயிலவும், பயன்படுத்தவும் உள்ள உரிமைகளை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை முன்னெடுக்கிறது.
நமது தாய்மொழியான தமிழில் சிந்திப்பதையும், எழுதுவதையும் ஊக்கப்படுத்தும் வகையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் கட்டுரைப் போட்டியை கோவை நன்னெறிக் கழகமும், ‘தி இந்து’ தமிழ் நாளிதழும் இணைந்து நடத்துகின்றன.
இதில், 8 முதல் பிளஸ் 1 வரை பயிலும் மாணவ, மாணவிகள், போட்டிக்கான கட்டுரைகளை அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் விழாவில் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் மாணவர்கள் கட்டுரை அனுப்பலாம். கட்டுரைகள் ஏ-4 தாளில், 3 முதல் 9 பக்கங்கள் வரை இருக்கலாம். கட்டுரைகள் சொந்த சிந்தனையில், சுய உழைப்பில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
கட்டுரைக்காகப் பயன்படுத்தப் பட்ட நூல்களின் பெயர்கள், தகவல்களுக்கான ஆதாரங்களின் அடிக்குறிப்புப் பட்டியல் இணைக்கப்பட வேண்டும்.
பள்ளித் தலைமை ஆசிரியரின் சான்று கையொப்பத்துடன் கட்டுரைகளை நேரிலோ அல்லது தபாலிலோ ‘தி இந்து’ அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கலாம். கட்டுரையுடன் மாணவர்களின் வீட்டு முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
கட்டுரைகளை ‘தி இந்து’, 19&20 ஏ.டி.டி. காலனி, எல்.ஐ.சி. ரோடு, கோயம்புத்தூர் - 641 018 தொலைபேசி: 0422 2212572’ என்ற முகவரிக்கு வரும் 27-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். கூடுதல் விவரங்களை https://mothertamil.wordpress.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
போட்டிக்கான தலைப்புகள்:
எம் தமிழர் அழகியல், எட்டுத் திக்கும் தமிழோசை, என்னை பாதித்த நாவல், மொழித்தேர் வடம் பிடித்த கவிக்குலத்தரசன், திருக்குறள் வழங்கும் அரசியல் தீர்வுகள்.