பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 260 கிலோ ராட்சத ‘கொப்பரை குலா’ மீன்: ரூ.26,000-க்கு விற்பனை
பாம்பன் நாட்டுப் படகு மீனவர் வலையில், 260 கிலோ எடையுள்ள ராட்சத 'கொப்பரை குலா' மீன் சிக்கியது. இந்த மீன் 26,000 ரூபாய்க்கு விற்பனையானது.
கடல் வாழ் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக் கூடியது கொப் பரை குலா மீன். இது மணிக்கு சராசரியாக 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வரை நீந்தக் கூடியது. மயிலின் தோகைகள் போன்று இந்த மீனின் துடுப்புகள் இருப்பதால் ராமேசுவரம் மீனவர்கள் மயில் மீன் என்ற பெயரிலும் இதை அழைக்கின்றனர்.
ஸ்வார்ட் ஃபிஷ் (sword fish) என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் இதனுடைய விலங்கியல் பெயர் சைபியஸ் கிளாடிஸ் ஆகும். கிளாடிஸ் என்றால் லத்தின் மொழியில் வாள் என்ற அர்த்தம். கொப்பரை குலா மீன்கள் ஆழ்கடலில் கூட்டம் கூட்டமாக காணப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்த பாம்பன் மீனவர் வலையில் ராட்சத அளவிலான கொப்பரை குலா நேற்று சிக்கியது. இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:
வியாழக்கிழமை கரை திரும்பிய பாம்பன் மீனவர் ஜெரோமியோஸ் என்பவரின் படகில் 12 அடி நீளத்தில் 260 கிலோ எடையில் ராட்சத கொப்பரை குலா மீன் சிக்கியது. ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக்கூடிய கத்தி மீன்கள் கடல் நீர் வெதுவெதுப்பாகவும், ஆழம் குறைவாகவும் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு இனப்பெருக்கத்துக்காக வந்திருக்கலாம்.
வாள் போன்று இருக்கும் இந்த மீனின் தாடையை பயன்படுத்தி மற்ற மீன்களை தனியாகவே வேட்டையாடும். கடலின் மேல் பரப்பில் தாவித்தாவி நீந்தும்போது படகில் உள்ள மீனவர்களை தனது தாடையால் தாக்கி ஆழமான காயங்களை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.
தனது வாழ்நாளில் ஒரு கத்தி மீன் சராசரியாக 2 லட்சம் கிலோ மீட்டர் வரை வெவ்வேறு கடல் பகுதிக்கு இடம் மாறிக்கொண்டே இருக்கும். இதனால் இதன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாது.
இம்மீனை பாம்பன் வியாபாரி ஒருவர், ஒரு கிலோ 100 ரூபாய் வீதம் 26,000 ரூபாய்க்கு வாங்கினார். இந்த மீனை வியாபாரிகள் மாசி கருவாடு தயாரிக்க அனுப்பி விடுவார்கள் என்றனர்.
