

தமிழக வான் பகுதியில் இருந்து மேகங்கள் விலகிச் சென்றதால் தமிழகத்தில் மீண்டும் வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான வானிலை நிலவி வந்தது. பல இடங்களில் மழையும் பெய்தது. இதனால் கோடையின் தாக்கம் குறைந்து விட்டதாக பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலை யில் நேற்று முதல் மீண்டும் வெயில் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தின் 10 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இந்நிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மற்றும் திருச்சியில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. சென்னை, கடலூர், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, திருத்தணி ஆகிய இடங்களில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும் காரைக்கால், நாகப்பட்டினம், புதுச்சேரியில் 100 டிகிரி வெயில் பதிவானது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறும்போது, “தென்மேற்கு பருவமழையின் தாக்கமாக தமிழகம் முழுவதும் மேகமூட்டமாக இருந்தது. இதன் காரணமாக சூரிய வெப்பம் தடுக்கப்பட்டு, வெயில் குறைந் திருந்தது. தற்போது தமிழகத் தில் இருந்து மேகங்கள் விலகிச் சென்றுவிட்டன. எனவே வெயில் அதிகரித்துள்ளது. 2 அல்லது 3 நாட்களுக்கு இந்த நிலை தொடரும்” என்றார்.