

நள்ளிரவில் கணவனுடன் சென்ற இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை யானைகவுனி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி வைத்தீஸ்வரி (19). இருவரும் காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். வைத்தீஸ்வரியின் வளர்ப்புத் தாய் மாரியம்மாள், ஏழு கிணறு உட்வார்ப் பகுதியில் வசிக்கிறார். இவருக்கு அண்ணாமலை என்பவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது தெரிந்ததும் சில தினங்களுக்கு முன்பு மாரியம்மாளிடம் வைத்தீஸ்வரி தகராறு செய்துள்ளார்.
அப்போது ஜெயக்குமார், அவரது தம்பி ஜெயகார்த்தி, தந்தை வெங்கடேசன் ஆகியோர் மாரியம்மாள் தரப்பைச் சேர்ந்த அசோக் என்பவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயக்குமாரும் வைத்தீஸ்வரியும் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் யானைகவுனி அண்ணா பிள்ளைத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை அண்ணாமலை, விஜயகுமார் உள்பட 3 பேர் ஓட ஓட விரட்டித் தாக்கினர். இதுதொடர்பாக வைத்தீஸ்வரி அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை, விஜயகுமார் ஆகியோரை யானைகவுனி போலீசார் கைது செய்தனர். மற்றொருவர் தலைமறைவாகிவிட்டார்.
இதேபோல, அசோக் கொடுத்திருந்த புகாரின் பேரில் ஜெயக்குமார், அவரது தம்பி ஜெயக்கார்த்தியை ஏழுகிணறு போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த வைத்தீஸ்வரி, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கலெக்டர் காப்பாற்றினாரா?
நடுரோட்டில் விரட்டிய கும்பலிடம் இருந்து வைத்தீஸ்வரியை சென்னை கலெக்டர்தான் காப்பாற்றினார் என்று அவரது குடும்பத்தினர் கூறினர். இது குறித்து கலெக்டர் சுந்தரவல்லியிடம் சனிக்கிழமை கேட்டபோது, வெள்ளிக்கிழமை அந்தப்பகுதிக்கு தான் செல்லவேயில்லை என்றும், அது பொய்யான தகவல் என்றும் தெரிவித்தார்.