

வடசென்னையின் தொழில் வளர்ச் சிக்காக ஆர்.கே.நகர் தொகுதியில் ‘ஒருங்கிணைந்த தொழில் பூங்கா’ அமைக்க வேண்டும் என அப் பகுதி இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் முதல் அடையாளமே வடசென்னைதான். மதராசபட்டின மாக இருந்த காலத்தில் இருந்தே ரயில் நிலையம், துறைமுகம், தொழிற்சாலைகள் என முக்கியத் துவம் வாய்ந்த பகுதியாக இருந்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் வடசென்னையில் அமைய வில்லை. அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். படித்த இளைஞர்கள் அதிகமாக இருக்கும் இந்தப் பகுதிகளில் போதிய வேலைவாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமாக இருக்கிறது.
தொழில் பூங்கா வேண்டும்
வடசென்னை பகுதியில் தொழில் துறை தொடர்பாக ஆய்வு நடத்திய சமூக ஆர்வலர் சரவண பெருமாள், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னையின் மூலாதாரமே வடசென்னைதான். ஆரம்ப காலத்தில் இருந்தே சென்ட்ரல், துறைமுகம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அனல்மின் நிலையங்கள் என வரிசையாக வந்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக பெரிய அளவில் எந்த ஒரு முக்கிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் வீட்டிலேயே ஊறுகாய் தயாரித்தல், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு போன்ற சிறு தொழில்களை அதிகமாக செய்து வருகின்றனர். லேத் பட்டறை, வெல்டிங், வாகன உதிரி பாகங்கள் தயாரித்தல் போன்ற சிறு தொழில்களும் அதிகமாக உள்ளன. தொழில்சார்ந்த கட்டமைப்புக்கு தேவையான பணியாளர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.
எனவே, 5 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வடசென்னையின் மையமான ஆர்.கே.நகரில் போதிய இடம் தேர்வு செய்து ‘தொழில் பூங்கா’ அமைக்க வேண்டும். இதில், இங்குள்ள சிறு, குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க முடியும். இதனால், சிறு தொழில்கள் வளர்ச்சி அடையும். மேலும், சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழில் பயிற்சி மையம்
ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த சிவக்குமார், பிரதீப் ஆகியோர் கூறியதாவது:
இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2.62 லட்சம் வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் இளைஞர்கள். இதில், பெரும்பாலோர் படித்தவர்கள். பொறியியல் பட்டதாரிகள் 15 சதவீதம் பேரும், மற்ற துறையில் பட்டம் பெற்றவர்கள் 20 சதவீதம் பேரும் உள்ளனர். ஆனால், எங்களுக்கான வேலைவாய்ப்பு வசதியோ, தொழிற்பயிற்சி வசதியோ இதுவரை ஏற்படுத்தித் தரப்படவில்லை. தொழிற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாலும் கிண்டி, தரமணி செல்ல வேண்டியுள்ளது.
வேலைக்காக தினமும் 50 கி.மீ. பயணம் செய்து வருகிறோம். இப்பகுதியில் தொழில் பூங்கா திறக்க அரசு தயங்குவது ஏன் என தெரியவில்லை. இளைஞர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு தொழில் பயிற்சி வழங்க பெரிய அளவிலான தொழில் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.