

சென்னையில் போராட்டம், வன் முறை சம்பவங்கள் ஏதுமின்றி அமைதி நிலை திரும்பியது. மெரினா கடற்கரை சாலையில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவ திக்குள்ளாகினர்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 17-ம் தேதி காலை சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் முன்பு இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்தது. மெரினாவை நோக்கி லட்சக்கணக்காண மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் படை யெடுக்கத் தொடங்கினர். மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தமிழகம் முழுவதும் போராட்டம் பரவியது.
மெரினாவில் பல லட்சம் பேர் திரண்டிருந்தபோதிலும் வன் முறையோ, அசம்பாவித சம்ப வங்களோ ஏதுமின்றி மிக அமைதி யான முறையில் போராட்டம் நடந்தது. அனைவரும் சுய கட்டுப் பாட்டுடன் போராட்ட களத்தில் இருந்தனர். போக்குவரத் துக்குகூட இடையூறு ஏற்படுத்த வில்லை. போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை தன்னார்வலர்கள் அளித்து வந்தனர். போராட்டத்தின்போது சேகரமான உணவுக் கழிவுகள், குப்பைகளை மாணவர்களே குழுக் களை அமைத்து அகற்றி வந்தனர். எனவே, இந்தப் போராட்டத்தை பொதுமக்கள் ஆதரித்ததுடன் பாராட்டும் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அவ சரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. மேலும், சட்டப் பேரவையில் நிரந்தரச் சட்டம் இயற்றப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதனால் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேற்று முன்தினம் போலீஸார் அப்புறப்படுத்தினர்.
கலவரம் வெடித்தது
இதையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, வன்முறையாக வெடித்தது. ஐஸ்அவுஸ் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. கலவரக்காரர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். சென்னையின் பல இடங்களுக்கு வன்முறை பரவியது. ஏராளமான வாகனங்கள் எரிக்கப்பட்டன. மாநகரப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. போலீஸாரைக் கண்டித்து பல இடங்களில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது. மாநகரப் பேருந்துகள் நிறுத்தப் பட்டன. நகரம் முழுவதும் பதற்றம் நிலவியதால் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மாணவர்களின் போராட்டம் முடிவுற்ற நிலையில் மெரினா கடற்கரை சாலையில் எந்த வாக னத்தையும் போலீஸார் நேற்றும் அனுமதிக்கவில்லை. கடற்கரை யில் உள்ள கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. மெரினா கடற்கரை முழுவதும் வெறிச்சோடி காணப் பட்டது. கடற்கரையோரம் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு செல்வோர் அடை யாள அட்டையை காண்பித்த பிறகே போலீஸார் அனுமதித்தனர்.
அதேபோல மெரினா கடற் கரைக்கு செல்லும் வாலாஜா சாலை, பாரதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை ஆகிய இடங்களில் தடுப்புகளை அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநகர பேருந்துகள், பிற வாகனங்கள் அண்ணா சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி, கல் லூரிகள், பணிக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
குடியரசு தின ஏற்பாடுகள்
நாளை குடியரசு தினம் கொண் டாடப்படுவதை ஒட்டி மெரினா கடற்கரை சாலை ஓரங்களில் உள்ள பூங்கா சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், சிலைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகள் நேற்று நடைபெற்றன.
மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெரும்பாலான மாணவர்கள் கலைந்து சென்ற நிலையில், சுமார் 50 பேர் கொண்ட ஒரு குழு மட்டும் கடல் அருகே நேற்று போராட்டம் நடத்தி வந்தது. அவர்களும் நேற்றிரவு கலைந்து சென்றனர். சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் பதற்றமான சூழல் இருந்தது. ஆனால், நேற்று எந்தவிதமான போராட்டங்களோ, மறியல் சம்பவங்களோ நடை பெறாததால் அமைதி நிலை திரும்பியது.
குப்பைகள் அகற்றம்
மெரினாவில் குப்பைகளை அகற்றும் பணியில் நேற்று சுமார் 850 மாநகராட்சி பணியாளர்களும், 50 லாரிகளும் ஈடுபடுத்தபட்டன. இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மெரினாவில் பண்டிகை நாட்கள், விடுமுறை தினங்களில் 10 முதல் 15 டன் வரை குப்பைகள் குவியும். மாணவர்களின் போராட்டம் கார ணமாக லட்சக்கணக்கானோர் மெரினாவில் திரண்டதால் கடந்த ஒரு வாரமாக டன் கணக் கில் குப்பைகள் குவிந்தன. கடற் கரை முழுவதும் சுமார் 100 டன் அளவுக்கு குப்பைகள் சேகர மாகும் என்று கருதுகிறோம். மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து குப்பைகளை அகற்றி வருகின்றனர். இதுதவிர, சுகாதாரம் கருதி கடற்கரையில் உள்ள மாநகராட்சி கழிப்பறைகள், சாலை ஓரங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு, அவை சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன’’ என்றார்.