கரூர் அருகே களைகட்டிய சேவல் சண்டை

கரூர் அருகே களைகட்டிய சேவல் சண்டை
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசில் நடைபெற்றுவரும் சேவல்கட்டில் ஆயிரக்கணக்கான சண்டை சேவல்கள் பங்கேற்று ஆக்ரோஷமாக மோதின.

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போன்றே, பயிற்சி அளிக்கப்பட்ட சண்டை சேவல்கள் மோதும் போட்டியான சேவல்கட்டுக்கு புகழ்பெற்றது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசு.

நூறாண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் நடைபெற்றுவரும் சேவல்கட்டில், இந்தாண்டு ஆயிரக்கணக்கான சேவல்கள் மோதவிடப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் நிகழாண்டு பூலாம்வலசில் திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கி வியாழக்கிழமை (ஜன.16) வரை 4 நாள்களும், கோவிலூரில் புதன்கிழமை (ஜன.15) மட்டும் சேவல்கட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதித்திருந்தது.

இவற்றில் ஆயிரக்கணக்கான சேவல்கள் சேவல்கட்டில் பங்கேற்றன. சேவல் சண்டையில் பங்கேற்பதற்கும், காண்பதற்கும் தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் சேவல்கட்டு நடைபெறும் இடங்களில் குவிந்திருந்தனர்.

சேவல்கட்டில் பங்கேற்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ள வல்லூறு, நூலான், கீரி, செவலை, மயில், பேடு வகை சேவல்கள் கரூர் மாவட்டம், அண்டை மாவட்டங்கள், தென் மாநிலங்களில் இருந்து பங்கேற்றன.

சேவல் உரிமையாளர்கள் தங்கள் சேவல்களுடன் மோதவிடுவதற்கு பொருத்தமான சேவல்களை உருவம், எடை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர். அதன்பிறகு, சேவல்களை மோதவிடுவதற்காக உள்ள ஜாக்கிகள் சேவல்களை மோதவிடுகின்றனர்.

சேவலின் வலதுகாலில் இதற்காக சிறு கத்தி கட்டப்படுகிறது. பிறகு சேவல்களை ஜாக்கிகள் பிடித்துக்கொண்டு இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றியபின் (ஆக்ரோஷம் கொள்ள) சேவல்களை மோதவிடுகின்றனர். இதில் ஆவேசம் அடையும் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதுகின்றன. மோதலில் காயமடையும் சேவல்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் அளித்து, தண்ணீர் தெளிப்பான் (ஸ்பிரேயர்) மூலம் அல்லது ஜாக்கிகள் வாயில் தண்ணீரை வைத்து சேவல் முகத்தில் ஸ்ரேபியர் போல தண்ணீரை ஊதியும் அதன் முகத்தில் வாயால் ஊதியும் மீண்டும் மோதவிடுகின்றனர். போட்டியில் வெற்றிபெறும் சேவல்கள் மீண்டும், மீண்டும் மோதவிடப்படுகின்றன. தோல்வியடைந்த சேவல்களில் சில பலத்த காயமுற்று இறந்து விடுவதும் உண்டு.

சேவல்கட்டும் நடக்கும் இடத்திலே பயிற்சி சண்டை சேவல்கள் விற்பனை செய்யப்பட்டன. இவை குறைந்தது ரூ.1500-ல் தொடங்கி ரூ. 3 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்டன. இவற்றை வாங்கி பிற சேவல்களுடன் மோதவிடுகின்றனர்.

மோதலில் இறந்த சேவல்கள், கோச்சை என அழைக்கப்படுகின்றன. சத்தான உணவு கொடுத்து வளர்க்கப்பட்டதால் அவற்றின் கறி ருசியாக இருக்கும் என்பதால் ரூ.1000-க்கும்

மேல் விலை நிர்ணயிக்கப்படும் கோச்சைகளை வாங்கவும் போட்டி நிலவியது.

கடந்தாண்டை விட இந்தாண்டு பார்வையாளர்கள் கூட்டம் அதிகம் இருந்தாலும், பங்கேற்ற சேவல்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாக சேவல்கட்டை காணவந்திருந்த பலரும் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in