

கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்ததாகவும், அதைத் தட்டிக் கேட்டவரை அவமரியாதைப்படுத்தி பதிலளித்ததாகவும் எழுந்த புகாரின்பேரில், குரோம் பேட்டை வெற்றி தியேட்டர் நிர்வாகத்துக்கு செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
கூடுவாஞ்சேரி ஜெய நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் செங்கல்பட்டு நுகர்வோர் கோர்ட் டில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு: குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 7- ம் தேதி ரஜினி முருகன் படம் பார்ப்பதற்காக பகல் காட்சிக்குச் சென்றேன். டிக்கெட் விலை ரூ.40. ஆனால் என்னிடம் ரூ.100 வசூலித்தனர். டிக்கெட்டின் விலையும் அதில் இடம் பெறவில்லை.
இது தொடர்பாக கேட்டபோது, தியேட்டர் மேலாளர் மரியாதை குறைவாக பேசினார். மகிழ்ச்சியாக சென்று படம் பார்க்கலாம் என்று கருதிய எனக்கு இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது.
எனவே என்னிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவிடுவதுடன், சேவை குறைபாட்டுக்காக இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் கே.சிவானந்தஜோதி, உறுப்பினர்கள் கே.பிரமிளா, டி. பாபு வரதராஜன் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்தி நேற்று உத்தரவு பிறப்பித்தது.
ரூ.25 ஆயிரம் இழப்பீடு
அதன்படி, ‘சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் இன்னல் ஆகியவற்றுக்கு எதிர் மனுதாரர்கள் இழப்பீடு தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
இந்த வழக்கின் செலவு தொகையாகவும், டிக்கெட் இழப்பீடு தொகையாகவும் ரூ.5 ஆயிரம் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.