

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக மதுரையில் 34 வார்டுகளில் அதிக வாக்குகளைப் பெற்றது. இந்த வார்டுகளை கைப்பற்றி முழு வெற்றியைப் பெற அதிமுக தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. முன்பு 72 வார்டுகளாக இருந்த மாநகராட்சி, புறநகர் பகுதிகளான மதுரை கிழக்கில் இருந்து 11, திருப்பரங்குன்றத்தில் இருந்து 13, மதுரை மேற்கில் இருந்து 2, தெற்கில் இருந்து 2 என 28 வார்டுகள் இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது..
கடந்த மாநகராட்சி தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் 34 வார்டுகளில் திமுக அதிமுகவைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 10 வார்டுகள் வரை அதிமுகவைவிட திமுக 500 வாக்குகள் வரை மட்டுமே குறைவாகப் பெற்றுள்ளது.
இது குறித்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு கூறியதாவது:
தற்போதைய நிலையில் திமுக, அதிமுக சம பலமாகவே உள்ளது. சட்டப்பேரவை தேர்தலைப்போல் மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜ, நாம் தமிழர் கட்சி ஆகியவை முழு வீச்சில் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இது திமுகவுக்கே சாதகமாக இருக்கும்.
மதுரையில் 38 வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என உளவுத் துறையினரே தெரிவித்துள்ளனர். இதைப் பார்த்து அக்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். இதனால்தான் கவுன்சிலர் ஜீவானநந்தத்தை அதிமுகவில் இணைத்துள்ளனர். மேலும் பலரை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இதையெல்லாம் கடந்து திமுக வெற்றி பெறும் என்றார்.
அதிமுக நிர்வாகி ஒருவர் கூறு கையில், திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலருக்கு மதுரையில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. இவர்களில் இசக்கிமுத்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. மற்றவர்களும் களம் இறங்கினால் திமுக வெற்றி பாதிக்கப்படும். ஆளும் கட்சிக்கே வாக்களிக்கும் மனநிலையில் வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு வார்டிலும் திமுக வெற்றியைப் பறிக்க பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தத் தயாராக உள்ளோம் என்றார்.
அதிமுகவுக்கு கடும் போட்டியை திமுக அளிக்கும் என்பதால் மதுரை மாநகராட்சி தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
திமுக அதிக வாக்குகள் பெற்ற வார்டுகள்
மதுரை கிழக்குத் தொகுதியி லுள்ள 11 வார்டுகளிலும் திமுக முன்னிலை பெற்றது. இதன் விவரம்: 24-வது வார்டில் 2,745, 25ல்-3,721, 26ல்-1,150, 28ல்-981, 29ல்-724, 32ல்-114, 48ல்-1,276, 49ல்-1,874, 2ல்-1,767, 3ல்-2,473, 4ல்-1,861 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளன.
திருப்பரங்குன்றம் தொகுதியில் வார்டு 9ல்-510, 11ல்-383, 13ல்-88 வாக்குகள் திமுக அதிகம் பெற்றுள்ளன. மதுரை மத்திய தொகுதியில் உள்ள 22 வார்டுகளில் 15 வார்டுகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. மதுரை தெற்கு, மத்திய, மேற்கில் 5 வார்டுகள் என மொத்தம் 34 வார்டுகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளதாக கட்சியினர் புள்ளி விவரங்களை சேகரித்துள்ளனர்.