Published : 04 Feb 2017 07:56 AM
Last Updated : 04 Feb 2017 07:56 AM

விபத்துக்குள்ளான 2 கப்பல்கள் சிறைபிடிப்பு: கப்பல் மாலுமிகள் மீது போலீஸில் புகார்

கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அகற்றும் பணி தீவிரம்

காமராஜர் துறைமுகம் அருகே நிகழ்ந்த கப்பல் விபத்தில் சிக்கிய 2 கப்பல்களையும் கடலோர காவல்படை சிறைபிடித்துள்ளது. அத்துடன், துறைமுக நிர்வாகம் கப்பல் மாலுமிகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ளது. இதற்கிடையே, கடல் நீரில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அகற்றும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 28-ம் தேதி எம்.டி. பி.டபிள்யூ. மேப்பிள் மற்றும் எம்.டி. டான் காஞ்சிபுரம் என்ற இரு கப்பல்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், எம்.டி.டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது.

இந்த கச்சா எண்ணெய் எண்ணூர் தொடங்கி திருவொற்றியூர், ராயபுரம், மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர், திருவான்மியூர், நீலாங்கரை என கிழக்கு கடற்கரை பகுதியில் சுமார் 32 கி.மீ. தூரம் வரை பரவி மாசு ஏற்படுத்தியுள்ளது.

அதிகமாக எண்ணூர், திருவொற்றியூர் பாரதியார் நகர் கடற்கரையில் மாசு பரவியுள்ளது. இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட் டுள்ளனர். சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணா மலை மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரர்கள் 170 பேர் ஈடுபட்டுள்ளனர். இது தவிர கடலோர காவல் படை வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோருடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்களும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய் படலம் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கும் வகையில் கடலில் மிதவை தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளன.

நவீன இயந்திரம்

இதற்கிடையே எண்ணெய் படலத்தை அகற்றும் பணிக்காக நவீன இயந்திரங்கள் பெங்களூரில் இருந்து வரவழைக்கப் பட்டுள்ளன. ஏற்கெனவே சென்னை மாநகராட்சியின் கழிவுநீரை உறிஞ்சி அகற்றும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. அந்த இயந்திரத்தால் கடினமான எண்ணெய் படலத்தை உறிஞ்சி எடுக்க முடியவில்லை. இதனால் பெங்களூரில் இருந்து எண்ணெய் படலத்தை உறிஞ்சும் 2 நவீன இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை நேற்று காலை முதல் எண்ணெய் படலத்தை உறிஞ்சி எடுத்து வருகின்றன.

வழக்குப் பதிவு

இதற்கிடையே, இந்த விபத்து குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, எண்ணூர் துறைமுக பொறுப்புக் கழக பொது மேலாளர் குப்தா மீஞ்சூர் போலீஸில் இரு கப்பல் மாலுமிகள் மீதும் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் இரு கப்பல் நிறுவனங்கள் மீதும், அதன் மாலுமிகள் மீதும் மீஞ்சூர் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 280, 285, 336, 427, 431 ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அஜாக்கிரதையாக கப்பல் ஓட்டுதல், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருளை அஜாக்கிரதையாக கையாளுதல், அஜாக்கிரதையாக செயல்படுதல், முறையான பாதையில் செல்லாமல் விபத்து ஏற்படுத்துதல், கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படுதல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியர் ஆய்வு

எண்ணூர் கடலில் எண்ணெய் அகற்றும் பணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேற்றும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “கடலில் கலந்த எண்ணெய் படலம் நேற்று வரை 72 மெட்ரிக் டன் அளவுக்கு அகற்றப்பட்டுள்ளது. எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் இன்று (நேற்று) 810 பேர் ஈடுபட்டுள்ளனர். மனிதர்கள் மூலம் அகற்றும் பணிதான் கைகொடுக்கிறது. இன்று மாலை அல்லது நாளை (இன்று) காலையில் இந்தப் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு கடலோர காவல் படை உதவியுடன் பாறைகளில் தேங்கியுள்ள எண்ணெய் படலம் சுத்தம் செய்யப்படும். கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி மீன் வளத்துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்” என்றார்.

எண்ணெய் படலத்தால் சென்னை கடற்கரை பகுதி முழுவதும் மாசு அடைந்துள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு அடைந்துள்ளன. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து சுற்றுச்சூழல் நிபுணர் குழுவை மத்திய அரசு சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் சென்னை வந்து கடற்கரை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்வர். அதன் அடிப்படையில் கடல் மாசுவை கட்டுப்படுத்த வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x