

அதிமுக மாணவர் அணிசார்பில், பல்லாவரத்தில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பி துரை பேசியதாவது:
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு கடந்தாண்டே தலையிட்டு முடிவுக்கு கொண்டுவந்திருக்கலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு முந்தைய ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளை அமைச்சர் அறிந்திருக்கவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், மத்திய அரசு நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று அரசாணையின் மூலம் காளை மாடுகளை காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கியிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது.
மிருகவதை தடுப்புச் சட்டத்தின் 37-வது பிரிவின்படி சட்ட அம்சங்களை மாநில அரசின் பொறுப்புக்கு மத்திய அரசு அளித்திருக்கலாம். அப்படி பகிர்ந்தளிப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனால், அதை இன்றுவரை மத்திய அரசு செய்யவில்லை.
மாநில அரசு தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசிடம் பேசியபோதும் பாராமுகமாக இருந்துவிட்டது. தற்போது ஜல்லிக்கட்டு நடக்க மாநில அரசின் சட்டம் மற்றும் மத்திய அரசின் சில நடவடிக்கைகளே காரணமாக அமைந்துள்ளன.