

தமிழகத்தை சரிவிலிருந்து மீட்கும் வகையில் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது 93-வது பிறந்த நாளையொட்டி நேற்று வெளியிட்ட அறிக்கை:
92 வயது முடிந்து 93-வது வயதில் அடியெடுத்து வைக்கிற இந்த இனிய வேளையில், என் அருமைத் தாய் அஞ்சுகம் அம்மாள், அன்புத் தந்தை முத்துவேலர், கொள்கை வடித்துத் தந்து வழிப்படுத்திய தந்தை பெரியார், அவையத்து முந்தியிருக்கச் செய்த பேரறிஞர் அண்ணா, அரசியல் களத்தில் வெற்றிகளை குவித்திட உதவிய நண்பர்கள், எதையும் தாங்கும் இதயத்தோடு எனை எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருக்கின்ற அன்பு உடன்பிறப்புகள் அனைவரையும் எண்ணி மகிழ்கிறேன்.
மிகப்பெரிய எதிர்க்கட்சி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக நூலிழையில் தவறவிட்டுள்ளது. எனினும், தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 89 இடங்களைப் பெற்று மிகப் பெரிய எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. கடந்த அதிமுக அரசின் அராஜகங்கள், ஊழல்கள், அரசியல் நாகரிகமற்ற அணுகுமுறைகள், ஜனநாயக விரோதச் செயல்பாடுகள், செயல் திறனற்ற நிர்வாகம் ஆகியவற்றை பல்வேறு கட்சிகளும் கண்டித்தன. ஆனால், அதிமுக வெற்றி பெறுவதற்கு கொல்லைப்புறத்தில் குறுக்கு வழி வகுத்து, திமுகவின் வெற்றியை தடுப்பதிலேயே சில கட்சிகள் குறியாய் நின்றன.
திமுக ஆட்சியில் கொண்டுவரப் பட்ட வடசென்னை, மேட்டூர், வல்லூர் அனல் மின் திட்டங்களின் பயன்களை தராமலும் புதிதாக ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைக்கூட தொடங்காமலும் இருந்ததுதான் கடந்த அதிமுக ஆட்சி.
கட்டண உயர்வு
பால் விலை, மின் கட்டணம், பஸ் கட்டணம் உயர்வு, 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் படுகொலைகள், ஏறத்தாழ ஒரு லட்சம் கொள்ளைச் சம்பவங்கள், வழிப்பறிகளால் சட்டம்-ஒழுங்கு கெட்டுக் குட்டிச் சுவராகியுள்ளது. பால் கொள்முதல், அரசு ஊழியர் நியமனம், பருப்பு கொள்முதல், முட்டை கொள்முதல், தனியாரிடம் மின்சாரம் வாங்கிய தில் ஊழல், தாது மணல் கொள்ளை, கிரானைட் ஊழல் என அரசின் துறைகள் அனைத்துமே ஊழலின் ஊற்றுக் கண்களாகவே மாறிவிட்டன. இத்தனையையும் புறந்தள்ளி, அதிமுகவுக்கே மீண்டும் ஆட்சி அதிகாரம் தாரைவார்க் கப்பட்டிருக்கிறது என்றால் ‘ஆடு, கசாப்புக் கடைக்காரனைத்தான் நம்புகிறது’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
திமுக ஆட்சியில், தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. வேளாண் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என அனைத்திலும் தமிழகம் முன்னணி மாநிலமாக இருந்தது. இந்த சாதனைகள் எல்லாம் சரிந்துகொண்டு உள்ளன. இவற்றை சகித்துக்கொள்ள முடியாது. எனவே, உழைப்பை மறந்து ஊழல் சாக்கடையில் புரளுபவர்களை திருத்திட ஓய்வின்றி உழைப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருணாநிதிக்கு இன்று 93-வது பிறந்த நாள்
திமுக தலைவர் கருணாநிதி, இன்று 93-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 1969-ல் அண்ணா மறைவுக்கு பிறகு திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவர், இதுவரை தொடர்ந்து கட்சித் தலைவராக இருந்து வருகிறார். 5 முறை முதல்வராக இருந்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 89 எம்எல்ஏக்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. கருணாநிதி 13-வது முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளார். இதுவரை போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோற்றதில்லை என்பதுடன் இந்தத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும் கருணாநிதி பெற்றுள்ளார்.
அவரது பிறந்த நாளான இன்று காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் கருணாநிதி மரியாதை செலுத்துகிறார். பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.
மாலை 5 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடக்கும் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கிறார். கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துவருகின்றனர்.