மோடி விதைத்த விதை இங்கே முளைக்காது: திருச்சியில் ப.சிதம்பரம் பேச்சு

மோடி விதைத்த விதை இங்கே முளைக்காது: திருச்சியில் ப.சிதம்பரம் பேச்சு
Updated on
1 min read

பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி திருச்சியில் விதைத்த விதை முளைக்காது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக 4 முறை பதவி வகித்த, மறைந்த அடைக்கலராஜின் சிலை திறப்பு விழாவிலும், புத்தூர் நான்கு ரோட்டில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியது: திருச்சியில் மோடி, ஆர்எஸ்எஸின் நச்சுக் கருத்துகளை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார். அந்த விதை இங்கே முளைக்காது. 2014-ல் நடைபெறவிருக்கும் தேர்தல் ஒரு அரசியல் கட்சிக்கும் இன்னொரு அரசியல் கட்சிக்கும் இடையே நடக்கப்போகும் தேர்தல் அல்ல. காங்கிரஸ் என்கிற கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் என்கிற ஒரு இயக்கத்துக்கும் இடையே நடக்கவிருக்கும் தேர்தல். காங்கிரஸ் ஆர்எஸ்எஸ் இடையே நடக்கப்போகும் மகாபாரதப் போர். ஆர்எஸ்எஸ் ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு ரகசிய நடவடிக்கைகளுடன் இயங்கும் ஒரு அமைப்பு. இதற்கு பாஜக, பஜ்ரங்தளம் என பல முகங்கள் உள்ளன. இந்த முகமூடிகளின் பின்னே இருப்பது ஆர்எஸ்எஸ் என்கிற கோர முகம். இந்த இயக்கம் இந்தியாவை கலவர பூமியாக்கி விடும். அதனால்தான் காந்திஜியை சுட்டுக்கொன்ற பிறகு சர்தார் பட்டேல் இந்த இயக்கத்துக்குத் தடை விதித்தார். தமிழகத்துக்கு ஆண்டுதோறும் உணவு மானியமாக இதுவரை ரூ.7056 கோடி வழங்கிவந்தோம். இனி ரூ.7970 கோடி வழங்கப்போகிறோம். அதாவது தமிழகத்துக்கு கூடுதலாக ரூ.914 கோடி மானியம் கிடைக்கப் போகிறது" என்றார் ப.சிதம்பரம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in