Published : 16 Jan 2014 01:50 PM
Last Updated : 16 Jan 2014 01:50 PM

சென்னை உலகக் கபடி போட்டிக்கு ரூ.1 கோடி: ஜெயலலிதா உத்தரவு

சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கபடி போட்டிகளுக்கு அரசு மானியமாக ரூ.1 கோடி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில், குறிப்பாக கிராம மக்களிடையே, மிகவும் பிரபலமான விளையாட்டு கபாடியாகும். இந்த விளையாட்டுக்கான உலக அளவிலான போட்டிகள் சென்னை மாநகரில் வரும் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-வது வாரத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகளில் இந்தியா, மெக்ஸிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், நேபாளம், ஈரான், பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா, சைனீஸ் தைபே, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 20 நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி அணிகள் கலந்து கொள்ளும்.

சென்னையில் நடக்கும் இப்போட்டிகளை நடத்துவதற்கு அரசு மானியமாக 1 கோடி ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஸ்குவாஷ் போட்டிகளுக்கு ரூ.75 லட்சம்

தமிழகத்தில் அதிக அளவில் உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விளையாட்டரங்கங்கள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான ஸ்குவாஷ் விளையாட்டரங்கில் வருகிற 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆசியாவிலேயே முதன் முறையாக 8வது உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் வாகையர் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, கிரேட் பிரிட்டன், ஹாங்காங், சீனா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, செக் குடியரசு, ஜெர்மனி, அயர்லாந்து, எகிப்து, சிங்கப்பூர், ஆஸ்திரியா, நைஜிரியா, ஸ்பெயின் மற்றும் நியுசிலாந்து ஆகிய 19 நாடுகளை சார்ந்த ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

உலக அளவிலான இந்த போட்டிகளை சென்னையில் நடத்திட முதல்வர் ஜெயலலிதா 75 லட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நவீன உடற்கூடத்துக்கு ரூ.4 கோடி

ஒவ்வொரு விளையாட்டு வீரரும், வீராங்கனையும் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கு மிகவும் அடிப்படை தேவை நல்ல உடல் ஆரோக்கியம் ஆகும். தினந்தோறும் செய்யும் உடற்பயிற்சியின் மூலமே இதனைப் பெறமுடி யும். எனவே இளைஞர் கள், சிறார்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் நல்ல உடல்நலத்துடன், ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற சீரிய நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் சென்னை நகரில் ஜவஹர் லால் நேரு விளையாட்ட ரங்கம் மற்றும் மதுரை, திருவண்ணாமலை, கன்னியா குமரி, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய 16 இடங் களில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கங்கள் என 17 இடங்களில் 1,500 முதல் 2,000 சதுர அடி பரப்பளவில் நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்க 1 கோடியே 50 லட்சம் ரூபாய், இந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கான உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காக 2 கோடியே 55 லட்சம் ரூபாய் என 4 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x