வறட்சியை வெல்லும் இயற்கை விவசாயி

வறட்சியை வெல்லும் இயற்கை விவசாயி
Updated on
2 min read

வரலாறு காணாத வறட்சியால் டெல்டா பகுதி முற்றிலும் பாலைவனமாக மாறியிருக்கும் இந்த காலகட்டத்தில் தனது நிலத்தில் நெல்லுக்குப் பதிலாக காய்கறி பயிர்செய்து, அதற்கு சொட்டுநீர் பாசனம் மூலம், நல்ல பலன் கண்டு வறட்சியை வென்றிருக்கிறார் ஒரு இயற்கை விவசாயி.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்துக்குட்பட்ட கொடவிளாகம் ஊராட்சி ஆண்டாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வன்மீக வெங்கடாச்சலம். மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியில் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றி 2013-ல் ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து தனது 100 குழி (கால் காணி) நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டு உழைத்து வறட்சியை வென்றுள்ளார்.

காய்கறி சாகுபடியை முற்றிலும் ரசாயன கலப்பில்லாமல் இயற்கை முறையில் செய்துவருகிறார் என்பதுதான் கூடுதல் சிறப்பு. உரங்களான மாட்டுச் சாணம், ஆட்டுப்புழுக்கை, மண்புழு ஆகியவற்றைக் கொண்டு ரசாயனம் கலக்காத காய்கறிகளை இவர் சாகுபடி செய்து வருகிறார்.

காய்கறிகளை பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை அரைத்து மாட்டுக் கோமியத்தில் ஊறவைத்து செடிகளில் தெளிப்பதால் அவற்றில் நோய்த் தாக்குதல் எதுவும் இல்லை என்கிறார் இவர்.

இதுகுறித்து வன்மீக வெங்கடாச் சலம் கூறியது: கடந்த 2013-ல் நான் ஓய்வு பெற்றபோது எனது ஊரான ஆண்டாஞ்சேரியில் என் தந்தை சாகுபடி செய்து வந்த 2 ஏக்கர் நிலத்தில் மற்ற விவசாயிகளைப் போலவே நெல், உளுந்து, பயறு ஆகியவற்றைப் பயிரிட்டு வந்தேன். அதில் லாபம் கிடைக்காத நிலையில் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதையடுத்து, நெல்லுக்குப் பதிலாக காய்கறி சாகுபடி செய்யலாம், அதையே முற்றிலும் இயற்கை முறையில் ரசாயனம் கலக்காமல் சாகுபடி செய்யலாம் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அதனை உடனடியாக செயல்படுத்தத் தொடங்கினேன். அதன் பயனாக தற்போது, எதிர்பார்த்ததை விட அதிக லாபமும் பெற்று வருகிறேன்.

100 குழி நிலத்தில் காய்கறி சாகுபடி செய்ய, ரூ.30 ஆயிரம் செலவு செய்தேன். 3 மாதத்துக்குள்ளாகவே அதைச் சம்பாதித்து விட்டேன், இனி கிடைப்பதெல்லாம் லாபம்தான் என்று கூறும் இவர், தான் செய்து வருவது போல மற்ற விவசாயிகளும் மாற்று விவசாயத்தில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

கத்தரிக்காய், வெண்டை, கொத்தவரங்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், சுரைக்காய், புடலை, வெள்ளரி, மற்றும் கீரை வகைகளான முளைக்கீரை, பசலை, பொன்னாங்கண்ணி, கேரளா தண்டுக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை ஆகியவை இவரது வயலில் தற்போது விளைந்திருக்கின்றன. நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை இவை விற்கப்படுகின்றன.

அனைத்து வகையான காய்கறிகள், கீரைகள் இருப்பதால் தொடர்ந்து விற்பனை நடந்து கொண்டேயிருப்பதால் அதிகப் படியான லாபம் கிடைக்கும். வேலையில்லாத் திண்டாட்டம் நிலவும் டெல்டாவில் இத் தகைய காய்கறி சாகுபடி தோட்டத்தால் பலருக்கு கூலி வேலையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in