Published : 29 Jun 2016 10:16 AM
Last Updated : 29 Jun 2016 10:16 AM

கல்லூரி தரம், வேலைவாய்ப்பை பொருத்தே பொறியியல் மாணவர்களுக்கு கல்விக்கடன்: வங்கிகள் இந்த ஆண்டு முதல் புதிய அணுகுமுறை

பொறியியல் கல்லூரிகளின் தரம், வளாக நேர்முகத்தேர்வு வேலைவாய்ப்புகள் ஆகிய வற்றின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு கல்விக்கடன் அளிக்க வங்கிகள் முடிவுசெய்துள்ளன.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் அரசு, தனியார் வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் படிக்கவும் கல்விக்கடன் பெறலாம். எந்தவிதமான பிணையமோ, 3-வது நபர் ஜாமீனோ இல்லாமல் ரூ.7.5 லட்சம் வரை கடன் பெறலாம். டியூஷன் கட்டணம், புத்தகச் செலவு, விடுதிக்கட்டணம், தேர்வுக்கட்டணம், போக்கு வரத்துச் செலவு ஆகிய அனைத்துக்கும் கல்விக்கடன் வழங்கப்படும்.

பொறியியல் படிப்புக்கான கல்விக்கடனை பொருத்தவரை, 4 ஆண்டுகள் படித்து முடித்ததும் அதன்பிறகு ஓராண்டு கழித்து மாதாந்திர தவணைகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். படிக்கும் காலத்தில் வட்டி மட்டும் செலுத்தினால் போதும். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்தால் வட்டிச்சலுகை உண்டு. வட்டியை மத்திய அரசே வங்கிக்கு செலுத்திவிடும்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க இந்தியன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, விஜயா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய 7 அரசு வங்கிகள் பல்கலைக்கழக வளாகத்தில் அரங்குகள் அமைத்துள்ளன.

கலந்தாய்வு முடித்து கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையுடன் வரும் மாணவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் ஒப்புதல் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவருக்கு கல்விக்கடன் வழங்குமாறு, அவர்களது வீட்டுக்கு அருகே உள்ள தங்களது வங்கிக் கிளைக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்வார்கள்.

இந்நிலையில், நடப்பு ஆண்டு முதல் கல்விக்கடன் வழங்க அரசு வங்கிகளில் புதிய அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு வரை எந்த கட்டுப்பாடும் இன்றி பொறியியல் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டது. தற்போது பொறியியல் கல்லூரிகளின் தரம், வளாக நேர்முகத்தேர்வு (கேம்பஸ் இன்டர்வியூ) வேலைவாய்ப்புகள் அடிப் படையில் மட்டுமே கல்விக்கடன் வழங்குமாறு இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்கள் சேர உள்ள கல்லூரி தரமானதா, அங்கு தரச்சான்று பெற்ற படிப்புகள் வழங்கப்படுகிறதா, அங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்முகத்தேர்வு மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் கல்விக்கடன் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தரமற்ற கல்லூரிகளில் படிப்பவர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாத பட்சத்தில் கல்விக்கடனை அவர்கள் திருப்பிச்செலுத்த முடியாமல் போகிறது. இதனால், கடனை திரும்ப வசூலிக்க வங்கிகள் படாதபாடுபட வேண்டியுள்ளது. எனவே, ஐபிஏ அமைப்பின் புதிய அணுகுமுறையை கறாராகப் பின்பற்ற வங்கிகள் முடிவு செய்துள்ளன.

இதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், வளாக நேர்முகத்தேர்வு மூலம் மாணவர்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு எளிதாக கல்விக்கடன் கிடைத்துவிடும். சாதாரண கல்லூரிகள், வேலைவாய்ப்பு குறைவாக உள்ள கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பது கடினம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x