குளம் சீரமைப்பு பணியில் களம் இறங்கிய இளைஞர்கள்

குளம் சீரமைப்பு பணியில் களம் இறங்கிய இளைஞர்கள்
Updated on
1 min read

ஹைட்ரோ கார்பன், மதுக்கடை போன்றவற்றை எதிர்த்து போராட்டம் நடத்திய இளைஞர்கள், தற்போது வடகாட்டில் உள்ள குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கடைவீதியில் சுமார் ஒரு ஏக்கரில் உள்ள குண்டுக்குளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரைகள் கட்டப்பட்டன. இந்தக் குளத்துக்கான வரத்துவாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழைக் காலத்தில்கூட குளத்துக்கு தண்ணீர் வருவது தடைபட்டது.

இதைத் தொடர்ந்து, குளம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததால், குளத்தின் உள்ளே சீமைக்கருவேல மரங்களும், புதர்ச் செடிகளும் மண்டின. இதனால் இப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இந்தக் குளத்தை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப் பட்டும், உள்ளாட்சி நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மதுக்கடைகளை மூடக் கோரியும் போராட்டம் நடத்திய இளைஞர்கள், தற்போது இந்தக் குளத்தை சீரமைக்கும் பணியில் இறங்கி உள்ளனர். முதல்கட்டமாக சீமைக்கருவேல மரங்கள், புதர்ச்செடிகள் வெட்டி அகற்றப்பட்டன. பின்னர், அங்கு கிடந்த சுமார் அரை டன் அளவுக்கான காலி மதுபாட்டில்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அ.தமிழரசன் கூறும்போது, “இந்தக் குளத்தை சீரமைக்க அரசு முன்வராததால் இளைஞர்களை திரட்டி குளத்தை சீரமைத்து, பூங்காவாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். குளத்தைச் சுற்றி ரூ.2 லட்சத்தில் முள்வேலி அமைக்கப்பட உள்ளது. பூங்காவுக்கு தேவையான விளையாட்டு கருவிகள், சிமென்ட் நடைபாதை, தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தரவேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in