

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் காங் கிரஸ் உறுப்பினர் எஸ்.விஜயதரணி (விளவங்கோடு) பேசியதாவது:
எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வதால் அரசுக்கு தேவையில்லாமல் பணம், நேரம் விரயம் ஏற்படுகிறது. எனவே, அவதூறு வழக்கு தொடர்வதை அரசு தவிர்க்க வேண்டும்.
கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கு மாறிய தலித்களுக்கு எஸ்.சி. சான்றிதழ் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் தேவாலயங்களுக்கு செல்கிறார், மசூதிக்கு செல்கிறார் என புகார் செய்யப்படுவதால் தலித்களுக்கு எஸ்.சி. சான்றிதழ் கிடைப்பதில்லை.பெற்றோருக்கு இருந்தால் அவர் களின் பிள்ளைகளுக்கும் எஸ்.சி. சான்றிதழ் வழங்க வேண்டும்.
கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): கடந்த திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை உயர்த்தி வழங்க வேண்டும். வக்ஃபு வாரிய சொத்துக்களை மீட்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். கடையநல்லூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவில் செயல் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
விஜயதரணியின் குற்றச் சாட்டுக்கு பதிலளித்த சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘அவதூறு வழக்கு தொடர்வதை எதிர்த்து போடப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விஜயதரணி மீது அவதூறு வழக்கு இருப்பதால் அவர், அவதூறு வழக்கே கூடாது என்ற கோரிக்கையை வைக்கிறார். என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அவதூறு வழக்கு போடக் கூடாது என்பதை ஏற்க முடியாது’’ என்றார்.