

சென்னையில் சிறுவன் தில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராமராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சென்னை தீவுத் திடல் அருகேயுள்ள இந்திரா காந்தி நகரில் ஏழைத் தொழிலாளியான குமார் வசித்து வருகிறார். அங்குள்ள ராணுவ குடியிருப்புப் பகுதியில் உள்ள பாதாம் மரத்தில் பாதாம் பழம் பறிப்பதற்காக கடந்த 3.7.2011 அன்று குமாரின் மகன் தில்சன் (13) தனது நண்பர்கள் சிலருடன் சென்றுள்ளார்.
அப்போது துப்பாக்கியால் ஒருவர் சுட்டதில், சிறுவன் தில்சன் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இது தொடர்பாக புலன் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், அந்த குடியிருப்பில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராமராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ராமராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய சென்னை செஷன்ஸ் நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ராமராஜ் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர், ராமராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான ராமராஜ் தனது துப்பாக்கியால் சுட்டதால்தான் சிறுவன் தில்சன் உயிரிழந்தார் என்பதை காவல் துறைத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம் செய்துள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.