

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறக்கப்பட்ட சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தை முதல் நாளான வெள்ளிக்கிழமை 3 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். நுழைவுக் கட்டணமாக ரூ.26 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
சென்னை மெரினா கலங்கரை விளக்கம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பார்வையிடுவதற்காக வியாழக்கிழமை திறக்கப்பட்டது. அன்று மட்டும் இலவசமாகப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். வெள்ளி க்கிழமையில் இருந்து நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நுழைவுக்கட்டணம்
திங்கள்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நுழைவுக்கட்டணம் செலுத்தி கலங்கரை விளக்கத்தைப் பார்வையிடலாம்.
கலங்கரை விளக்கத்தை மட்டும் சுற்றிப்பார்க்க பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம் வசூலிக்கப்படுகிறது. கலங்கரை விளக்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அருங்காட்சியகத்தைப் பார்வையிட தனியாக நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். அங்கேயும் பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம் வசூலிக்கிறார்கள். கேமரா எடுத்துச் சென்றால் ரூ.25. செல்போனில் படமெடுத்தால் கட்டணம் கிடையாது.
வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை விடுமுறை என்பதால் ஏராளமான பேர் குவிந்தனர்.
இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கலங்கரை விளக்க நிர்வாகிகளும், போலீசாரும் திணறினார்கள். முதல் நாளான வெள்ளிக்கிழமை 3,000 பேர் பார்வையிட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்று கலங்கரை விளக்க மேற்பார்வை அதிகாரி ஒருவர் கூறினார்.
வாசன் திடீர் வருகை
கலங்கரை விளக்கம் திறக்கப்பட்ட முதல் நாளான வெள்ளிக்கிழமை, மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், திடீரென்று அங்கு வந்தார். அப்போது, கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட்ட அவர், அங்கு சுற்றுச்சுவரின் தடுப்புக் கம்பிகளின் அகலம் மிக அதிகமாக உள்ளதால், குழந்தைகள் நலன் கருதி, அதனை சரிசெய்ய உத்தரவிட்டார்.
மேலும், கலங்கரை விளக்கத்தில் காணப்படும் சிறிய குறைபாடுகள் இரண்டு மாதங்களில் சரிசெய்யப்படும் என்றார்.