30 ரவுண்டு.. 18 தோட்டாக்கள்: புலி வேட்டையில் புதிய தகவல்கள்

30 ரவுண்டு.. 18 தோட்டாக்கள்: புலி வேட்டையில் புதிய தகவல்கள்
Updated on
1 min read

உதகை மற்றும் சுற்றுவட்டார 50 கிராமங்களை நிம்மதியிழக்க செய்த கொடூர மனித வேட்டைப் புலி புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

புலியை வேட்டையாட வனத்துறை முதன்மை வனப்பாது காவலர் லட்சுமி நாராயண், கோவை வனப்பாது காவலர் வி.டி.கந்தசாமி உத்தரவின் பேரில் மாவட்ட வன அலுவலர்கள் சுகிர்தராஜ் கோயில்பிள்ளை, பத்ரசாமி தலைமையில் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்களுடன் தமிழக சிறப்பு அதிரடிப்படை சத்தியமங்கலம் முகாமிலிருந்து ஆய்வாளர் ஜெய்சிங் தலைமையில் 12 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

மன உளைச்சல்

கொடூர புலி கொல்லப்பட்ட திக் திக் தருணங்களை நம்மிடையே விளக்குகிறார் ஆய்வாளர் ஜெய்சிங்..

புலி கடைசியாக தஞ்சமடைந்த குந்தசப்பை நிலப் பரப்பு மிகவும் கடினமானது. இப் பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளது. மேலும் வனப் பகுதியிலும் முட்புதர்கள் சூழ்ந்திருந்தன. இதனால் பதுங்கியுள்ள புலியை பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

புலி அகப்படாததால் ஒரு கட்டத்தில் அனைவருமே மன உளைச்சலுக்கு ஆளானோம். இந் நிலையில், புதன்கிழமை பசுவை புலி தாக்கிய தருணம்தான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து புலியை சுற்றி வளைத்தோம். புலியை கண்டறிய முதுமலை வன ஊழியர் பொம்மன் பெரும் உதவியாக இருந்தார். புலி எங்களைத் தாக்க முற்பட்டதால், தற்காப்புக்காக சுட நேர்ந்தது. முதலில் குண்டு காயத்துடன் புலி தப்பியது. ஆக்ரோஷமான புலி எங்களை சுற்றி வந்தபோது மீண்டும் அதனைச் சுட நேர்த்தது. பல குண்டுகள் பாய்ந்ததும் புலி உயிருக்குப் போராடி தேயிலை தோட்டத்தில் விழுந்தது என்றார்.

வனத்துறைக்கு அனுபவம்

வடக்கு வனக்கோட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில்பிள்ளை கூறுகையில், 1972ம் ஆண்டு வனப்பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டதால் வேட்டை குறைந்து வன விலங்குகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனத்தை ஒட்டி குடியிருப்புகள் உள்ளதால் மனித-விலங்கு மோதல் அதிகரிக்கவே செய்யும். இந்த தேடுதல் பணி வனத்துறைக்கு சிறந்த அனுப வமாக அமைந்துள்ளது என்றார்.

துளைத்த குண்டுகள்

புலியை சுட்டபோது அது குண்டு காயத்துடன் அதிரடிப்படையினர், வனத்துறையினரை தாக்க முற்பட்டுள்ளது. இதனால், அதை சுட்டுக் கொல்ல நேர்ந்துள்ளது. சுமார் 30 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும், இதில் 16 முதல் 18 குண்டுகள் புலியின் உடலில் துளைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. ஆனால், எத்தனை குண்டுகள் அதன் உடலில் பாய்ந்துள்ளன என்பது பிரேத விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in