Last Updated : 07 Nov, 2014 10:45 AM

 

Published : 07 Nov 2014 10:45 AM
Last Updated : 07 Nov 2014 10:45 AM

என் படங்கள் கல்யாணச் சாப்பாடு மாதிரி! - இயக்குநர் ஹரி பேட்டி

ஹரியின் ஹீரோக்களுக்கு மட்டும் எங்கிருந்து எனர்ஜி கிடைக்கிறது, இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறார்களே என்று பல முறை தோன்றியிருக்கிறது. ஹரியிடம் நேர்காணல் செய்த பிறகுதான் கதாநாயகர்கள் ஹரியிடமிருந்தே அவ்வளவு எனர்ஜியையும் பெறுகிறார்கள் என்பது தெரிகிறது. ஹரியுடனான உரையாடலிலிருந்து…

ஆக்‌ஷன் கலந்த மாஸ் என்டர்டெயினர்தான் உங்கள் பாதை என்பதை எப்போது உணர்ந்தீர்கள்?

நான் உதவியாளராக இருந்தபோது எந்த மாதிரியான படங்கள் நீண்ட நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும் என்று யோசித்தேன். அப்போது கே.எஸ். ரவிக்குமாரின் படங்கள் வந்தன. ஒரு பொழுதுபோக்கு படம் என்பது ஆக்‌ஷன் மட்டுமல்லாமல் குடும்பத்தையும் மையப்படுத்தி இருக்க வேண்டும் என்பது என் திட்டம். சில படங்களில் குடும்ப செண்டிமெண்ட் அதிகமாக இருந்தது. ஆறு படத்தில் ஆக்‌ஷன் அதிகமாக இருந்தது.

உங்கள் படங்களில் முதல் பாதியில் இருக்கும் சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இல்லாததுபோல் இருக்கிறதே?

என்னுடைய படங்களில் இருக்கும் ஹீரோ சாதாரணமானவன். கோபப்படுகிற ஹீரோ. அவனுடைய பிரச்சினையைத்தான் அவனால் தீர்க்க முடியும். மொத்தமாக இந்தியாவில் இருக்கும் கூலிப் படையையோ, மொத்த தீவிரவாதிகளையோ அழிப்பேன் என்று போக முடியாது. சிறிய கதையை எடுத்துக்கொண்டு, நெருக்கமான வலுவான திரைக்கதையை அமைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய உத்தி. ஒருவருக்கு ஒருவர் என்பதுபோல இருந்தால்தான் வசனம் சரியாக, வலுவாக எழுத முடியும். ஹரி படம், ஹரி படமாகத்தான் இருக்கும்.

உங்கள் படங்களை தியேட்டரில் பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் இரண்டாம் முறையாக டிவியில் பார்க்கும்போது பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் வேகத்தடை போல இருக்கிறதே? பாடல், நகைச்சுவை இல்லாமல் முழு ஆக்‌ஷன் படம் எடுக்க முடியாதா?

கல்யாணச் சாப்பாட்டில் பல வகையான உணவு வகைகள் இருக்கும். அனைவரும் அனைத்துவிதமான சாப்பாட்டையும் ருசிப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும். தனிப்பட்ட ரசனைக்கான படம் எடுக்க முடியாது. ஹரி படம் என்பது கல்யாணச் சாப்பாடு போல. இங்கு எல்லாமும் இருக்கும். உங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். குருதிப்புனல் படம் நீங்கள் சொல்வதைப் போல இருக்கும். ஆனால் அதுபோன்ற படத்தை என்னால் எடுக்க முடியாது.

ஆக்ரோஷமான, டீடெயிலான வசனங்களை எப்படி எழுதுகிறீர்கள்?

வசனம் எனக்கு உயிர்போல. அவைதான் பார்வையாளரிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ‘ஃபர்ஸ்ட் காபி’ வரைக்கும் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வசனங்களைத் தொடர்ந்து மெருகேற்றிவருகிறோம். ஆக்ரோஷமான வசனம் எழுதுவதற்குச் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் மனநிலைக்குச் சென்றுதான் யோசிக்க முடியும். மேலும் நான் வசனங்களை எழுதுவதில்லை. நான் ஆக்ரோஷமாகப் பேசுவதை அப்படியே பதிவுசெய்து எழுதும்போதுதான் அந்த வசனங்களுக்கு வலுக் கிடைக்கின்றனவோ என்னவோ!

சிங்கம் படத்தில் ‘ரெண்டு புல்லெட் பாய்ந்து, மூன்றாவது குண்டு டிராவல் ஆகும்போதே அவன் செத்திருப்பான்’ என இவ்வளவு டீடெயிலான வசனங்களைப் படத்தின் வேகத்தைத் தாண்டியும் பார்வையாளனால் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறீர்களா?

வசனங்களை நான் வீட்டில் இருந்துதான் எடுக்கிறேன். ரெண்டு தோசைபோதும், மூணாவது தோசை வேண்டாம் என நாம் சொல்வதன் வேறு வடிவம்தான் இந்த டயலாக்.

காக்க காக்க படத்திலும் சூர்யா போலீஸ் அதிகாரி, சிங்கத்திலும் சூர்யா போலீஸ் அதிகாரி. ஆனால் சிங்கம் படத்தைப் பார்த்து வெளியே வரும்போது சத்தம் அதிகமாக இருப்பதுபோல் இருக்கிறதே?

உங்களுக்குப் பிரச்சினை வந்தால்தான் சத்தம் பற்றித் தெரியும். வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போது உங்களிடம் பிரச்சினை செய்யும்போது உங்களுக்குக் கோபம் வரும். உங்கள் முன் உங்கள் அப்பா சட்டையைப் பிடித்தால் உங்களுக்கு இன்னும் கோபம் வரும். இதைச் சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது. எனக்குத் தோன்றுவதுபோல்தான் என்னுடைய ஹீரோக்களும் இருப்பார்கள்.

நீங்கள் தயாரிப்பாளரின் இயக்குநர் என்பதால்தான் இந்தக் கேள்வி. 13 படம் எடுத்தாகிவிட்டது. படத் தயாரிப்பில் ஈடுபடும் திட்டம் இருக்கிறதா?

தயாரிப்பாளரின் இயக்குநர் என்பதால்தான் இந்த வேலையை என்னால் செய்ய முடியாது. தயாரிக்கும்போது என்னால் இயக்க முடியாது. என் வேலை இயக்கம்தான். தயாரிப்பு என்னால் முடியாது. ஏற்கெனவே தயாரிப்பாளர்போல் கணக்கு பார்த்து வருகிறேன். இதில் தயாரிப்பாளர் ஆகிவிட்டால் கணக்கு மட்டும்தான் பார்த்துக்கொண்டிருப்பேன்.

நீங்கள் வேகமாக இருப்பது சரி, உங்கள் ஒளிப்பதிவாளர், எடிட்டர், நடிகர்கள் எப்படி வேகமாக இருக்கிறார்கள்?

அவஸ்தை, கொடுமை, அவர்களுக்குத் தண்டனைதான். இது போர்க்களம் என்ற தெளிவு இருப்பவர்கள்தான் என்னுடன் வருவார்கள். என்னுடன் வருபவர்கள் தயாராகிவிட்டால் பிரச்சினையே இல்லை. முன்பதிவு செய்யாத டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள் எதற்கும் தயாராகி எப்படியோ ஊர் போய்ச் சேர வேண்டும் என்ற மனநிலையில் வருவார். அதுபோல் தயார் மனநிலையில்தான் வருகிறார்கள். கேமராமேன் முதல் சாப்பாடு போடும் நண்பர்கள் வரை தயாராகிதான் வருகிறார்கள்.

ரஜினி, கமல், விஜய், அஜித் இவர்களை இதுவரை இயக்கவில்லை. அதேபோல் புதுமுகங்களை வைத்தும் நீங்கள் படம் எடுக்கவில்லையே?

அவர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் நிச்சயம் செய்வேன். புதுமுகங்களை வைத்துப் படம் எடுப்பதற்குக் கதை வேண்டும். கதையம்சம் உள்ள படங்களை நான் எடுப்பதில்லை. அதனால் புதுமுகங்களை வைத்து எடுக்க முடியாது.

உங்களுடைய படங்கள் மற்ற மொழிகளில் எடுக்கப்படுகின்றன. நீங்களே அதைச் செய்யலாமே?

தமிழில் அடுத்தடுத்த படங்கள் கமிட் ஆகின்றன. பூஜை முடிந்த பிறகு சூர்யா சார் படம் கமிட் ஆகிவிட்டேன். இப்போது நினைத்தாலும் பூஜையை இந்தியில் எடுக்க முடியாதே.

அடுத்து சிங்கம் மூன்றாம் பாகமா?

இன்னும் முடிவாகவில்லை.

கதையை முடிவு செய்யாமல், எப்படி சூர்யாவுடன் இணைவதை மட்டும் முடிவு செய்து தேதிகளை வாங்கினீர்கள்?

நாங்கள் நிறைய கதையைப் பேசி வைத்திருக்கிறோம். அடுத்த ஓரிரு வாரங்கள் போதும். கதையை முடிவுசெய்ய..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x