

தருமபுரி அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பொருத்த நேற்று 10 புதிய ஏசி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் ஏசி இயந்திரங்கள் கடந்த சில மாதங்களாக பழுதாகி இருப்பதாக நேற்று ‘தி இந்து’ இதழில் செய்தி வெளியானது.
காற்றோட்டத்துக்காக தீவிர சிகிச்சைப் பிரிவு அறையை திறந்து வைப்பதால் கொசு, ஈ போன்றவற்றின் நடமாட்டம் மற்றும் கிருமித் தொற்று ஆகியவை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று 10 புதிய ஏசி இயந்திரங்கள் இளம் குழந்தைகள் பிரிவுக்குக் கொண்டு வந்து இறக்கப்பட்டன. இதில் சில இயந்திரங்கள் மட்டும் இளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குப் பொருத்தப்பட உள்ளன. மற்றவை இளம் குழந்தைகள் பிரிவின் கூடுதல் கட்டிடத்துக்குப் பொருத்தப்பட இருக்கின்றன. சமீபத்திய குழந்தைகள் இறப்பு சம்பவம் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆய்வு ஆகியவற்றின் தொடர்ச்சியாக இளம் குழந்தைகள் பிரிவின் கூடுதல் கட்டிடமும் விரைவாக தயாராகி வருகிறது. இதுபோன்ற விரைவான நடவடிக்கைகளை பரபரப்பான சூழலில் மட்டுமன்றி அனைத்து நேரங்களிலும் அதிகாரி கள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.