Published : 02 Mar 2017 10:22 AM
Last Updated : 02 Mar 2017 10:22 AM

வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் புதிய விதிமுறைகளால் பட்டாசு தொழில் ஸ்தம்பிக்கும் அபாயம்: சிவகாசியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம், கடையடைப்பு

மத்திய வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறை கொண்டுவரும் பட்டாசுக் கடைகளுக்கான புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசியில் நேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது. சிவகாசி மற்றும் திருத்தங்கலில் கடையைப்பு போராட்டமும் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதார மாகத் திகழ்வது பட்டாசுத் தொழில். விருதுநகர் மாவட்டத்தில் தற்போது மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் 178, சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற பட்டாசு ஆலை கள் 152, நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகள் 437 என மொத்தம் 767 பட்டாசு ஆலைகளும், 1,624 பட்டாசுக் கடைகளும் இயங்கி வருகின்றன.

இதனால், 2 லட்சத்துக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் நேரடியாக வும், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 95 சதவீதம் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது.

விபத்துகளைத் தடுக்க மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை நாடு முழுவதும் உள்ள பட்டாசுக் கடை களுக்கான புதிய வரைவு சட்ட விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, பட்டாசுக் கடையின் அருகே 3 பக்கமும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கோயில்கள், ஏடிஎம்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவில் பட்டாசுக் கடை இருக்க வேண்டும், குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே பட்டாசுக் கடை இருக்க வேண்டும், பட்டாசுக் கடைக்கு மேல் மாடி இருக்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன.

இப்புதிய சட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் உள்ள 99 சதவீத பட்டாசுக் கடைகள் மூடப்படும் நிலையும், இதனால் ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலும் நலிவடையும் நிலையும் ஏற்படும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என பட்டாசு உற்பத்தியாளர் கள் கூறி வருகின்றனர். புதிய சட்ட வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவகாசியில் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை காலவரையின்றி மூடி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பட்டாசுத் தொழி லாளர்கள் சிவகாசி திருத்தங்கல் குறுக்குப்பாதை திடலில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அனைத்திந்திய பட்டாசுத் தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். வணிகர் சங்கத்தினர், அச்சுத் தொழில் சார்ந்தோர், வியாபார சங்கத்தினர், ஆட்டோ தொழிலாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் என பல்வேறு சங்கத்தினர், பாஜக, மதிமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிவகாசி மற்றும் திருத்தங்கலில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட் டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்களும் ஓடவில்லை.

அமைச்சர் உறுதி

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டாசு ஆலை உரிமை யாளர்களுக்கு பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து பேசும்போது, “பட்டாசுத் தொழிலுக்கு எப்போது ஆபத்து வந்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம். பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நடத்தும் இப்போராட்டம் நியாயமானது. பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளேன். பட்டாசுத் தொழில் நலிந்தால் தமிழகத்தில் மட்டுமே சுமார் ஒரு கோடி பேர் வேலை இழப்பார்கள். எனவே, புதிய விதிமுறைகள் அனைத்தும் இனி வரும் பட்டாசுக் கடைகளுக்குத்தான் என அறிவிக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் எந்த உதவியானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x