Published : 22 Nov 2013 12:00 AM
Last Updated : 22 Nov 2013 12:00 AM

முதல்வர் வீட்டருகே திமுக பேனரை தடுத்தேன்: கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான நெடுமாறன் உள்பட சுமார் 80 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று டெசோ சார்பில் தீர்மானம் நிறை வேற்றியிருந்தால், சிறையில் இருந்து நாங்கள் வெளியே வர மாட்டோம் என்று நெடுமாறன் அறிக்கை விட்டிருப்பார்! அதனால்தான் நாங்கள் அறிக்கைக் கூட விடவில்லை.

முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு நிகழ்ச்சிக்கு கருணாநிதிக்கு அழைப்பு அனுப்பப்படுமா என்று செய்தியாளர் கேட்டதற்கு, ’ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது’ என்று பதிலளித்தவர் பழ.நெடுமாறன். அப்படிப்பட்டவரை விடுவிக்க வேண்டுமென்று, நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினால் ஏற்றுக் கொள்வாரா?

கொஞ்ச காலமாக அதிமுக ஆட்சியை நெடுமாறன் பாராட்டிக் கொண்டுதான் வந்தார். ஆனால் திடீரென முள்ளி வாய்க்கால் முற்றம் நிகழ்ச்சிக்குப் பிறகு, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, சட்டசபையில் தீர்மானம் போடுவது, அறிக்கைகள் வெளியிடுவது என்பது போன்ற நாடகங்களில், முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து ஈடுபடுகிறார் என்று கூறியிருக்கிறார்.

’தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்’ என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது. அதிமுகவினர் என்னை விமர்சித்து தேவையில்லாமல் பேனர் வைத்ததைப் பார்த்துவிட்டு, சென்னை மாவட்ட திமுகவினர், முதல்வர் வீட்டு வாசலில் பேனர் வைக்க முற்பட்ட செய்தி எனக்குக் கிடைத்தது. அண்ணா கற்றுக் கொடுத்த அரசியல் நாகரிகத்தின்படி அதைத் தடுத்து நிறுத்தினேன்.

(காஞ்சிபுரத்தில் அண்ணா வீட்டு வாயிலில் வைக்கப்பட்டிருந்த ’கண்டன போர்டு’க்கு எதிரில், ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டை வைத்து, உபயம் - அண்ணா துரை என்று எழுதி வைத்தார்.)

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்த ஆணையத்தின் அறிக்கை, காவல் துறையினரைக் காப்பாற்றுவதைப் போல இருப்பதாகச் சொல்கி றார்கள். அதிமுகவின் பிரதான தோழமைக் கட்சியும், அடுத்த மாநிலங்களவைத் தேர்தலில் தங்களுக்கு ஓரிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, காத்திருக்கும் கட்சியுமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே, ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x