

தருமபுரி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சத்திரம், குருபரஹள்ளி, ஆலங்கரை குப்பூர் குரும்பன்குட்டை, திண்டல், அடிலம், நாகசமுத்திரம் உள்ளிட்ட 21 ஏரிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட துணை ஆட்சியர் அமீர் பாட்ஷா, பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு அலுவலர்கள் சிங்காரவேல், ரத்தினவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அலுவலர்கள் கூறும் போது, ‘‘குடிமராமத்து திட்டத்தின் கீழ் 21 ஏரிகளைச் சீரமைக்கும் பணிகள் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. இப்பணிகளுக்காக ரூ.1 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஏரி தூர் வாருதல், கரை சீரமைப்பு, பாசனப் பகுதிகளுக்குச் செல்லும் கால்வாய், மதகுகளைச் சீரமைத்தல், சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் செய்யப்படுகிறது.
இந்த பணிகளுக்கு மொத்த செலவில் 10 சதவீத பணம் அல்லது அதற்கு தகுந்த உடல் உழைப்பை பாசனம் பெறும் விவசாயிகள் வழங்க வேண்டும். ஏரிகள் சீரமைப்பு பணிகள் 3 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீரமைக்கப்படும் ஏரியில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, விற்பனைத் தொகை அரசு கணக்கில் சேர்க்க உள்ளது,’’ என்று தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் ஏரிகள் சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.