Published : 14 Mar 2017 10:55 AM
Last Updated : 14 Mar 2017 10:55 AM

மதுரை மாவட்ட கண்மாயில் ரூ.5.29 கோடியில் குடிமராமத்துப் பணி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை மாவட்டத்தில் உள்ள 70 கண்மாய்களில் ரூ.5.29 கோடியில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திருமங்கலம், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

கரிகால சோழன் காலம் முதல் செய்யப்பட்டு வரும் குடி மராமத்துப் பணி தமிழக அரசால் மீண்டும் புத்துயிர் பெற்று, விவசாயிகள் நலன், குடிநீர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும் நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் தமிழக அரசு, விவசாயிகளின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க 30 மாவட்டங்களில் முதற்கட்டமாக ரூ.100 கோடியில் 1,159 கண்மாய்கள் மேம்படுத்தப்படுகின்றன. நீர்நிலைகளை பாதுகாக்க மதுரை மாவட்டத்தில் 70 இடங்களில் ரூ.5.29 கோடியில் மராமத்துப் பணி தொடங்கப்பட்டுள்ளது. வரத்துக் கால்வாய்கள், கால்வாய்கள், ஏரிகள், குட்டைகள், பிற நீர்நிலைகள் புனரமைக்கப்படும். கரைகள் பலப்படுத்தப்படும். மதகுகள் மறுகட்டுமானம் செய்தல், நீர்நிலைகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நிலையூர் கண்மாய் கரையை 2,880 மீட்டர் நீளத்திற்கு ரூ.9.60 லட்சத்தில் புனரமைக்கவும், திருமங்கலம் தாலுகா தூம்பக்குளம் கிராமக் கண்மாயில் 4,100 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்ட வரத்துக் கால்வாயை மேம்படுத்த ரூ.9.80 லட்சம், மேலூர் அட்டப்பட்டி சாத்தினி கண்மாயில் 1,350 மீட்டர் நீளக் கரையை புனரமைக்க ரூ.9.50 லட்சம் என மொத்தம் ரூ.28.90 லட்சத்தில் பணிகள் நடந்து வருகிறது என்றார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியர் கொ.வீர ராவக ராவ் பேசுகையில், கண்மாய்களில் தூர்வாரப்படும் வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் விண்ணப்பித்தால் உரிய அனுமதி அளிக்கப்படும். இத்திட்டத்தை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

எம்எல்ஏ.க்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ், பெரியபுள்ளான், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் எம்.முத்துப்பாண்டியன், விவசாய சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x