Published : 21 Aug 2016 09:53 AM
Last Updated : 21 Aug 2016 09:53 AM

விரைவில் தொழுநோயாளிகள் நல சட்டங்கள்: மத்திய சுகாதார அமைச்சர் நட்டா உறுதி

தொழுநோயாளிகளின் நலன் காக்கும் சட்டங்களை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதியளித்தார்.

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம், நாக்பூரை சேர்ந்த சக்-ஷம் அமைப்பு, சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (சிஎல்ஆர்ஐ) சார்பில் தொழுநோய் குறித்த தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

இந்தியாவில் இருந்து தொழுநோய் ஒழிக்கப்பட்டுவிட்டது என கடந்த 2005-ல் மத்திய அரசு அறிவித்த பிறகு, அதன் மீதான கவனம் குறைந்துபோனது. பின்னர், தொழுநோய் முற்றிலும் ஒழிக்கப்படாததை கருத்தில் கொண்டு, அந்த நோய் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த தீர்மானித்தோம். முதல்கட்டமாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 7 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாவட்டங்களில், ஒவ்வொரு வீடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தொழுநோய் பாதிப்பு இருக்கலாம் என 65,000 பேர் கண்டறியப்பட்டனர். அதில் 5,000 பேருக்கு தொழுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2-ம்கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் 20 மாநிலங்களைச் சேர்ந்த 163 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள் ளப்பட உள்ளது. ஏற்கெனவே கணக் கெடுப்பு நடத்தப்பட்ட 50 மாவட்டங் களில் பாதிப்பு முற்றிலும் நீங்கி விட்டதா என மறு ஆய்வு செய்யப்படும்.

சமூக, சட்டரீதியாக தொழுநோயா ளிகள் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். அவர்களுக்கு எதிரான சட்டப் பிரச்சினைகளை தீர்க்க, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள சட்ட மசோதா மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கவுதமானந்தஜி பேசும்போது, ‘‘தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல், மனம், ஆன்மிகரீதியாக ஆதரவு தேவைப்படுகிறது. சமூகத்தில் மற்ற வர்கள் போலவே, தொழுநோயாளி களுக்கும் அனைத்து உரிமைகளும் அளிக் கப்பட வேண்டும்’’ என்றார். ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்தர் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் 1 முதல் 1.5 லட்சம் பேர் தொழுநோயால் பாதிக்கப்படு கின்றனர். இதில் 10 சதவீதம் பேர் குழந்தைகள். இந்த நிலையை மாற்ற போதிய விழிப்புணர்வையும், பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய மருத்துவ உதவி களையும் அளிப்பது அவசியம்’’ என்றார்.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறியதாவது: தொழுநோயா ளிகளுக்கு எதிரான பழமையான சட்டங் களால் வாகனம் ஓட்டுவது, பயணம் செய்வது, திருமணம், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது, வேலை வாய்ப்பு போன்றவற்றில் அவர்களது உரிமைகள் புறக்கணிக்கப் படுகின்றன. இதையடுத்து, நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான சட்ட ஆணையம், தொழுநோயாளிகள் நலனுக்கான பரிந்துரைகளை சட்ட அமைச்சகத்திடம் கடந்த ஆண்டு சமர்ப்பித்தது. உடனடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய ஒரு சட்ட மசோதாவையும் தயார் செய்தது. அது தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. தொழுநோயாளி களின் நலனைக் கருத்தில் கொண்டு, சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ள சட்ட மசோதாவை உடனடியாக சட்டமாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் எம்.பி. தருண் விஜய் பேசும்போது, ‘‘சட்ட ஆணையம் சமர்ப் பித்த சட்ட மசோதாவை வரும் நாடாளு மன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறை வேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தொழுநோயாளிகள் ரயில்வே போன்ற பொதுப் போக்கு வரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ரயில்களில் தொழுநோயாளி களை அனுமதிப்பது குறித்து ரயில்வே அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் சவுமியா சுவாமிநாதன், சிஎல்ஆர்ஐ இயக்குநர் பி.சந்திரசேகரன், நாக்பூர் சக்-ஷம் அமைப்பின் தேசியச் செயலாளர் கே.சுகுமார், பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், வானதி சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x