

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகை கவுதமி நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவுக்குள் பிளவு ஏற்பட்டு 12 எம்.பி.க்கள், 10 எம்.எல்.ஏ.க்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவைத் தலைவர் மதுசூதனன், மூத்த தலைவர் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்த நடிகை கவுதமி அவருக்கு ஆதரவு தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த கவுதமி இப்போது வெளிப்படையாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.