Last Updated : 02 Mar, 2017 11:22 AM

 

Published : 02 Mar 2017 11:22 AM
Last Updated : 02 Mar 2017 11:22 AM

மீண்டும் தள்ளி போனது புதுச்சேரி துறைமுக ஒப்பந்தம்: முதல்வர், அமைச்சரும் டெல்லி செல்லாமல் திரும்பினர்

கண்டெய்னர் சரக்கு போக்குவரத்தை கையாள சென்னை - புதுச்சேரி துறைமுகம் இடையே நேற்று போடவிருந்த ஒப்பந்தம் மத்திய அமைச்சர்களின் தேர்தல் பிரசார பயணத்தால் தள்ளிபோனது. இந்நிகழ்வில் பங்கேற்க டெல்லி புறப்பட்ட முதல்வரும், அமைச்சரும் தகவலையறிந்து சென்னையில் இருந்தபடியே புதுச்சேரி திரும்பினர்.

புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு புதுச்சேரி துறைமுகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரி துறைமுகம், சென்னை துறைமுகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு கன்டெய்னர் மூலம் புதுச்சேரி துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கும் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது என்று பலமுறை தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் இருந்து சரக்குகள் உடனடியாக இறக்கப்படாததால் நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. சென்னை துறைமுகத்திற்கு வரும் சரக்குகளில் தென்தமிழகத்திற்கு செல்ல வேண்டியவைகளை புதுச்சேரியில் இறக்கி இங்கிருந்து கொண்டு செல்ல திட்டமிட்டு இந்த ஒப்பந்தம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

விரைவில் சென்னை துறைமுகத்திற்கும், புதுச்சேரி துறைமுகத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் நடைபெற்று விடும்; புதுச்சேரி துறைமுகத்தில் இந்த முறையில் சரக்குகள் கையாள்வதால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்; புதுச்சேரியின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும் என்று முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்து வந்தார்.

ஒப்பந்தம் கையெழுத்து தொடர்பாக பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்து தள்ளி போனது.

இதற்காக டெல்லி செல்லும்போது மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்து வலியுறுத்தி வந்தார். பொதுவாக ஒப்பந்தங்கள் அந்தந்த மாநிலத்தில்தான் நடைபெறும். ஆனாலும் புதுச்சேரியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சென்னை அல்லது டெல்லியில் ஒப்பந்தம் போடுவதற்கான நிகழ்ச்சியை வைத்துக் கொண்டாலும் புதுச்சேரி அரசு பங்கேற்கும் என்றும் முதல்வர் நாராயணசாமி அறிவித்து இருந்தார்.

கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூட முதல்வர், மார்ச் 1ம் தேதியன்று புதுச்சேரி துறைமுகத்திற்கும், சென்னை துறைமுகத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற உள்ளதாகவும் அதில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலை விமானம் மூலம் முதல்வர் நாராயணசாமியும், அமைச்சர் கந்தசாமியும் டெல்லி செல்வதற்காக சென்னை சென்றனர்.

இதற்கிடையில் மத்திய அமைச்சர்கள் உத்திரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க சென்று இருப்பதாகவும், டெல்லியில் இல்லை என்றும் முதல்வர் நாராயணசாமியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து முதல்வர் நாராயணசாமி டெல்லி செல்லாமல் புதுச்சேரிக்கு நேற்று திரும்பினார்.

துறைமுக திட்டம் தொடர்பாக அரசு தரப்பில் கேட்டதற்கு, "லாபத்தில் 50 சதவீதம் புதுச்சேரி துறைமுகமும், 50 சதவீதம் சென்னை துறைமுகமும் பிரித்துக் கொள்ளும். சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் கன்டெய்னர்கள் பார்ஜ் மூலம் புதுச்சேரி துறைமுகத்தில் இறக்கப்படும். அங்கிருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக கன்டெய்னர்கள், விழுப்புரம், சேலம், திருச்சி, கோவை மாவட்டங்களுக்கு எளிதில் கொண்டு செல்லப்படும். முதலாம் ஆண்டில் 1 மில்லியன் டன் டன்களும், பின்னர் படிப்படியாக 4 மில்லியன் டன்களாக சரக்கு போக்குவரத்தை கையாளும் திட்டமுள்ளது" என்று குறிப்பிட்டனர்.

"புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் மத்திய அரசை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், இது காங்கிரஸ் அரசு என்பதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டங்களை செயல்படுத்த காலதாமதம் செய்வது வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளது" என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x