Published : 26 Sep 2016 03:33 PM
Last Updated : 26 Sep 2016 03:33 PM

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: உள்ளாட்சித் தேர்தலில் 8 மேயர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

8 மேயர்களுக்கு வாய்ப்பு மறுப்பு:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், சென்னை உட்பட 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதில் ஏற்கெனவே மேயர் பதவியில் உள்ள 8 பேருக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை மேயர் சைதை துரைசாமி, திண்டுக்கல் மேயர் மருதராஜ், தூத்துக்குடி மேயர் அந்தோனி கிரேஸ், நெல்லை மேயர் புவனேஸ்வரி, ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், திருச்சி மேயர் விசாலாட்சி, கோவை மேயர் ராஜ்குமார், வேலூர் மேயர் கார்த்தியாயினி ஆகியோருக்கு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

சென்னைக்கான ஜெ. வியூகம்:

2016 டிசம்பர் வெள்ளம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலித்தது. 16 தொகுதிகளில் 6 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வசமானது. 'சென்னை வெள்ளம் பின்விளைவு' உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலிக்கக் கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா சில வியூகங்களை வகுத்திருக்கிறார். அதன்படி சென்னையில் உள்ள வார்டுகளில் மக்கள் செல்வாக்கு மிகுந்த நபர்களை களம் இறக்கியிருக்கிறார்.

அவரது கணிப்பின்படி சென்னையில் 25 கவுன்சிலர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் செல்வாக்கின் அடிப்படையில் முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.குப்பன், கே.கந்தன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மேயர் வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரன்?

சைதை துரைசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஜே.சி.டி. பிரபாகருக்கு மேயர் வேட்பாளராக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. வில்லிவாகத்தில் 80-வது வார்டில் ஜே.சி.டி.பிரபாகரன் போட்டியிடுகிறார். நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளார் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் ஜே.சி.டி.பிரபாகரன். இருப்பினும் 80-வது வார்டில் அவரது செல்வாக்கு ஓங்கி இருப்பதால் அவரை அங்கு களமிறக்கியுள்ளார் ஜெயலலிதா.

நேரடித் தேர்தல் முடிவடைந்த பின்னர் நவம்பர் 2-ம் தேதி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அப்போது சென்னையின் மேயர் வேட்பாளராக ஜே.சி.டி. பிரபாகரன் முன்னிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

திருச்சியில் சாருபாலா தொண்டைமான்:

திருச்சியில் 44வது வார்டில் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். இவர் அண்மையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்குப் பின்னர் இவரே திருச்சி மேயராக முன்னிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால் ஆகிய மூன்று மேயர்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சேலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நடேசனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x