

கடலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்கு வாசன் கோஷ்டி யினர் சொந்தம் கொண்டாடி நேற்று அலுவலகத்தை முற்று கையிட்டதைத் தொடர்ந்து மோதலைத் தவிர்க்கும் வகையில் அலுவலகத்துக்கு கடலூர் வட்டாட்சியர் பூட்டி சீல் வைத்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து வாசன் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து அவர் தனிக்கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித் துள்ளார். இந்நிலையில் காங்கிர ஸிலிருந்து வாசன் பக்கம் சென்ற காங்கிரஸார் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் காங்கிரஸ் அலுவல கத்தை வாசன் ஆதரவாளர்கள் கைப்பற்றக்கூடும் என்பதால், காங்கிரஸார் அதன் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலகத்திலேயே தங்கியிருந்தனர்.
இந்நிலையில் வாசன் ஆதரவாளர்களான முன்னாள் எம்பி பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்த காங் கிரஸார் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் வாசன் ஆதர வாளர்கள் அலுவலக வளாகத்தில் இருந்த காங்கிரஸ் கொடியை அகற்றிவிட்டு, தமாகா கொடியை ஏற்றினர். மேலும் கட்சி அலுவலக சுவற்றில் எழுதப்பட்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் என்ற வாசகத்தையும் பெயிண்ட் மூலம் அழித்தனர். அலுவலக கட்டிடத்தில் தமாகா சின்னத்தை குறிக்கும் வகையில் சைக்கிளை நிறுத்தினர்.
இந்நிலையில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராதாகி ருஷ்ணன், முன்னாள் எம்பி அழகிரி ஆதரவாளர்கள் அங்கு குவிந்து, மீண்டும் கட்சி அலுவலகத்தை மீட்கும் வேலையில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்பகுதி யில் 100க்கும் மேற்பட்ட போலீ ஸார் குவிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்டத் தலைவர் எம்ஆர்ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மணிரத்தினம், நிர்வாகிகள் பிரகாஷ், குமார், இளஞ்செழியன், காந்திராஜ் உள்ளிட்டோர் மாவட்ட எஸ்பி ஆ.ராதிகாவிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், காங்கிரஸ் அலுவலகத்தை கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஆக்கிரமித் துள்ளனர். கடந்த 1996-ம் ஆண்டும் இதேபோல காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஆக்கி ரமித்தபோது கடலூர் காங்கிரஸ் அலுவலகம் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமானது என்று மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். எனவே காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டவர்களை கட்சி அலுவலகத்திலிருந்து அப்புறப் படுத்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று தெரி விக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே முன்னாள் எம்பி கே.எஸ்.அழகிரி கடலூர் கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா விடம், அலுவலகம் காங்கிரஸ் கட்சிக்கே சொந்தம். இதனை சட்டப்படி நிருபிப்போம். அதுவரை கட்சி அலுவலகம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார்.
இதையேற்ற கோட்டாட்சியர், அலுவலகத்தில் உள்ள வாசன் ஆதரவாளர்களை வெளியேற்ற போலீஸாருக்கு பரிந்துரைத்தார். மேலும் வட்டாட்சியர் மூலம் அலுவலகத்துக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கடலூர் வட்டாட்சியர் செழியன், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பூட்டி சீல்வைத்தார். இதன் பிறகு சற்று நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். அங்கிருந்த வெளியேற மறுத்த வாசன் ஆதரவாளர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
இதுகுறித்து முன்னாள் எம்பி கே.எஸ்.அழகிரி கூறும்போது, கடலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் காங்கிரஸ் கட்சிக்கு தான் சொந்தம். இதற்குரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இதனை கோட்டாட்சியரிடம் சமர் பிப்போம் என்றார்.
வாசன் ஆதரவாளரான முன்னாள் எம்பி பிஆர்எஸ்.வெங்கடேசன் கூறும்போது, 1962-ம் ஆண்டு முதல் கடலூரில் காங்கிரஸ் மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது.
1969, 77, 80 ஆண்டுகளில் காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு காரணமாக எனது தந்தையும், மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவருமான சீனிவாசன் படையாட்சி பொறுப்பில் இருந்து வந்தது. 1996-ம் ஆண்டு தமாகா உதயமான போதும் தற்போதைய அலுவலகம் தமாகாவின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வந்தது. தற்போது மாவட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் வாசன் தலைமையில் அணிதிரண்டு உள்ளோம்.
இந்த அலுவலகத்துக்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது என்றார்.