Published : 15 Aug 2016 08:43 AM
Last Updated : 15 Aug 2016 08:43 AM

அனுமதியின்றி தங்க வைக்கப்பட்ட விவகாரம்: தனியார் தொண்டு நிறுவனத்தில் மாணவிகள் மீட்பு - குழந்தைகள் நலக் குழுமத்தினர் நடவடிக்கை

தொண்டு நிறுவனத்தில் அனுமதி இன்றி தங்க வைக்கப்பட்டிருந்த 9 பள்ளி மாணவிகளை குழந்தைகள் நலக் குழுமத்தினர் மீட்டனர்.

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் தொண்டு நிறுவனத்தில் உரிய அனுமதி இல்லாமல் தங்க வைக்கப்பட்ட 5 குழந்தைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் நலக் குழுமத்தினர் மீட்டனர்.

இந்நிலையில், இந்த தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த மேலும் 9 பள்ளி மாணவிகளை மீட்டு, அரசு அனுமதி பெற்ற காப்பகங்களில் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாணவிகளை மீட்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவர் மணிகண்டன் தலைமையில், உறுப்பினர் ஜகிருத்தீன் முகமது, தாம்பரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டேவிட் பால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா, குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் மற்றும் போலீஸார் தொண்டு நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 9 வயது முதல் 11 வயதுடைய 9 சிறுமிகளை மீட்டனர். அவர்கள் 9 பேரும் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 4 ,5 மற்றும் 6-ம் வகுப்புகளில் படித்து வந்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுமிகளை அரசு அனுமதி பெற்ற காப்பகங்களில் தங்க வைத்து, அதே பள்ளியில் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் ஜகிருத்தீன் முகமது கூறியதாவது: இந்தத் தனியார் தொண்டு நிறுவனம் அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. இங்கு 5 வயதுக்கு கீழே உள்ள 5 குழந்தைகளை ஏற்கெனவே மீட்டு அரசு காப்பகங்களில் தங்க வைத்துள்ளோம்.

நீதிமன்றம் உத்தரவு

மற்ற 9 மாணவிகளையும் ஒப்படைக்குமாறு நோட்டீஸ் தந்தபோது, அதை எதிர்த்து தொண்டு நிறுவனத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றனர். எனினும், இவ்வழக்கில் 9 மாணவிகளை மீட்டு, அரசு அனுமதி பெற்ற காப்பகங்களில் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 9 சிறுமிகளின் பெற்றோர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பன உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக இல்லை. தொண்டு நிறுவன நிர்வாகி மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x