

சென்னையில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. மாணவியைக் கொலை செய்த ஜெயராமன் அவரையும் குடும்பத்தினரையும் கடந்த 5 ஆண்டுகளாகத் தொந்தரவு செய்துவந்துள்ளார்.
சென்னை மணலி புதுநகரில் வசித்து வரும் இன்பராஜ் என்பவரது மகள் அனுபாரதி (17) கடந்த ஞாயிற்றுக்கிழமை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெயராமன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அனுபாரதியை தனக்கு திருமணம் செய்து வைக்க மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே அவர் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அனுபாரதியின் உறவினர் ஒருவர், கொலைக்கான காரணங்களை நம்மிடம் கண்ணீரோடு பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
அனுபாரதியின் தந்தை இன்பராஜ், ஜெயராமனின் தந்தை கருவேலமுத்து ஆகிய இருவருக்குமே சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள திருவழுதிவிளை கிராமம். அவர்களுக்கு ஒரே தெருவில் எதிரெதிர் வீடு.
அனுபாரதி சிறுமியாக இருக்கும் போதே இன்பராஜ் தொழில் விஷயமாக சென்னையில் குடியேறிவிட்டார். இந்நிலையில் ஜெயராமனின் தம்பி ராஜா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது இரண்டு ஆண்டுகள் அனுபாரதியின் வீட்டில் தான் தங்கியிருந்தாராம்.
அப்போது தம்பியைப் பார்ப்பதற்காக ஜெயராமன் அனுபாரதி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது அனுபாரதியை ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்கியுள்ளார். ஆனால் அனுபாரதியோ அவரை அண்ணன் என்றே தொடர்ந்து அழைத்து வந்தார்.
வதந்தி பரப்பியவர்
இருப்பினும் அனுபாரதியைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தானும், அனுபாரதியும் காதலிப்பதாக ஊரில் வந்து ஜெயராமன் வதந்தியைப் பரப்பியுள்ளார்.
அனுபாரதி 8-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ஜெயராமன் தொந்தரவு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக பல முறை கண்டித்தும் அவர் தனது தொந்தரவைக் கைவிடவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செல்போன் மூலமும் தொந்தரவு செய்துள்ளார்.
இது தொடர்பாக மூன்று முறை போலீஸில் புகார் செய்ய முயன்றும், அவரது தந்தை கெஞ்சி தடுத்துவிட்டார்.
பணம் கேட்டு நெருக்கடி
மேலும் அனுபாரதியின் பெற்றோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருவேலமுத்துவிடம் ரூ. 20 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தனராம். ஆனால், தற்போது பிரச்சினை உருவானதைத் தொடர்ந்து கருவேலமுத்து வட்டி எல்லாம் சேர்த்து தற்போது ரூ. 1.5 லட்சம் பணம் தரவேண்டும் என கூறியுள்ளார். பணம் தரவில்லை எனில் திருவழுதிவிளையில் வீட்டுக்கு அருகேயுள்ள நிலத்தைத் தங்கள் பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டுள்ளனர். அல்லது அனுபாரதியை ஜெயராமனுக்குத் திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டுள்ளார்.
ஜெயராமனைக் கருவேலமுத்து கண்டித்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது. இந்த கொலை தொடர்பாக அவரிடமும் விசாரித்தால் மேலும் பல தகவல் கிடைக்கும் என்றார்.